பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

11

சைவ சமயத்தாராதலால், வேத சமயத்தைப் பின்பற்றும் பிராமணரிலும் மேம்பட்டவரென்றும் தொழிலால் வைசியரென்றும் சூத்திரர் அவர்களுக்குத் தாழ்ந்தவர்களென்றும் இந்நூல் கூறுகிறது. இக்கருத்துக்களின் முரண்பாடு எளிதில் விளங்கும்.

தமிழ் நாட்டின் நிலப்பிரபுக்கள், சிறு நிலவுடைமையாளரில் பலர் சைவ வேளாள சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தமக்கு மேலுள்ள வகுப்பாரோடு தங்களைச் சமமானவர்களாகவும் கீழுள்ளவர்களைத் தங்களுக்குத் தாழ்ந்தவர்களென்றும் கருதி அவர்களை அவ்வாறே வைத்திருக்கவும் விரும்பினார்கள் என்பதை இந்நூல் காட்டும். எனவே, இவர்கள் சாதி அமைப்பு முறையை எதிர்க்கவில்லை. அதில் தங்களுடைய பதவியை உயர்த்திக்கொள்ளவே விரும்பினார்கள். இதற்காகத் தமிழ் நூல்களையும் வேதங்களையும் பயன்படுத்தினார்கள்.

ஏறக்குறைய இதே காலத்தில் (1904) பனையேறும் தொழிலாளர்களின் சாதியில் தோன்றி, கள்ளுக்கடைக் குத்தகையெடுத்தும் வியாபாரம் செய்தும் செல்வம் திரட்டிய கிராமணிகள் தங்கள் சாதி உயர்ந்ததென்று நிலைநாட்ட ‘க்ஷத்திரியகுல விளக்கம்’8 என்ற நூலை வெளியிட்டார்கள். அந்நூலில் வருணப் பிரிவுகளை ஏற்றுக்கொண்டு தாங்கள் சூத்திரர்கள் அல்லரென்றும் க்ஷத்திரியர்களென்றும் சொல்லிக் கொண்டார்கள். க்ஷத்திரியர்களான ஜனகன் முதலியவர்களிடமிருந்துதான் பிராமணர்கள் பிரம்மஞானம் என்ற உயர்ந்த அறிவைப் பெற்றார்களென்றும் எனவே க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குக் குருமுறையாவார்கள் என்றும் அந்நூல் கூறுகிறது. பழந்தமிழ் நூல்கள் கூறும், கள் விற்போர் தாமல்லரென்றும் படைத் தலைமையே தமது தொழில் என்றும் அந்நூலாசிரியர் கூறுகிறார். உழைப்பவர், பெருமை யுடையவரல்லர், கீழ்ச்சாதியார் என்னும் கூற்றை இந்நூல் மறுக்கவில்லை. கீழ்ச்சாதி என்று கருதப்பட்டவர்களில் செல்வர்களாகிவிட்டவர்கள் தங்கள் சாதிக்கு உயர்வு கற்பிக்கச் செய்த முயற்சியாகவே இந்நூலின் கருத்துக்கள் காணப்படுகின்றன.

தென்னாட்டு நாடார்களுடைய உயர்வைக் கூறும் ஒரு நூல் 1937இல் வெளியிடப்பட்டது. அது ‘நாடார் மன்னரும் நாயக்க மன்னரும்’9 என்பது. இந்நூலாசிரியர்கள் வேதங்களை யும் புராணங்களில் கூறப்படும் வருணப் பிரிவினையையும் ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ‘சான்றோர்’ என்னும் சொல் தம் சாதியையே குறிக்கும் என்று