பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

15

நூல்களில் காணப்படும் ‘சான்றோர்’ என்னும் சொல் தம்மையே குறிக்கிறதென்று கூறினர். புதிய புராணங்களைப் புனைந்து தம்மை அரச மரபினரென்றும் தாங்கள் வைசியருக்கும் பிராமணருக்கும் உயர்ந்தவர்களென்றும் சொல்லிக் கொண்டனர்.

இவர்களுடைய கருத்துக்களனைத்தும் பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை மறுக்கின்றன. அவ்வாறு கூறும் புராணக் கருத்துக்களையும் மறுக்கின்றன.

இவர்களுடைய நூல்கள் வருணாசிரமப் பிரிவுகளை எதிர்க்கவில்லை. அதில் தங்களுக்களிக்கப்பட்ட தாழ்ந்த ஸ்தானத்தைத்தான் மறுக்கின்றன.

வேளாளர் நூலான வருண சிந்தாமணியைத் தவிர, மற்ற சாதி வரலாற்று நூல்கள் வேதங்களை ஒப்புக்கொள்ளுகின்றன. சாதி சமத்துவத்திற்கும் அவற்றை ஆதாரமாகக் காட்டுகின்றன. வருண சிந்தாமணிகூட வேதங்களில் சாதிப் பிரிவினைக்கு ஆதாரமில்லை என்று ஒப்புக்கொள்ளுகிறது.

புராணங்களையும் மனுஸ்மிருதியையும் மறுக்கும் சாதி வரலாற்று நூல்கள் வேதத்தை மட்டும் ஒப்புக் கொள்ளுகின்றன. இதற்குக் காரணம் என்ன?

வேதப் பாடல்களில் பல, வருணாச்சிரம முறை தோன்றுவதற்கு முன் தோன்றியவை; முக்கியமாக ரிக்கு வேதத்தின் முதல் பகுதி, ஆரியர் கால்நடை வளர்க்கும் இனக்குழுக்களாக (Pastoral tribes) வாழ்ந்தபொழுது தோன்றிய கூட்டு வணக்கப் பாடல்கள்.14 அக்காலத்தில் வர்க்கப் பிரிவுகளோ, சாதிப் பிரிவுகளோ இருந்ததில்லை. எனவே, குழுவிலுள்ள யாவரும் சமமாகவே வாழ்ந்தனர். அவர்கள் அனைவரும் இயற்கைச் சக்திகளான தேவர்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள். இப்பாடல்களில் சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றி எதுவும் காணப்படவில்லை.

புராணங்களையும் மனுஸ்மிருதியையும் இச்சாதி வரலாறுகள் எதிர்க்கின்றன. இது ஏன்? வர்க்கப் பிரிவினைகள் ஏற்பட்டு, வருணாசிரமம் தோன்றி, சாதிப் பிரிவுகளை நிலைப்படுத்தி வைக்க உயர்ந்த வர்க்கத்தினருக்கு அவசியம் ஏற்பட்ட காலத்தில் புராணங்களும் மனுஸ்மிருதியும் தோன்றின. இவற்றின் நோக்கம் சாதி உயர்வு தாழ்வுகளுக்கு நியாயம் கூறுவதும் அதனைச் சட்ட பூர்வமாக்கும் விதிகளை வகுப்பதுமாகும்.

முதல் நோக்கத்தை நிறைவேற்றப் புராணங்களையும் இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்ற மனுஸ்மிருதியையும் உயர் வர்க்கத்தினர் எழுதினர். இதனால்தான் சாதி சமத்துவம் கோரும் சாதியினர் அந்நூல்களின் கருத்துக்களை எதிர்த்தனர்.