பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்


பிராமணர்களோடு தாங்கள் சமமானவர்கள் என்று நிரூபிக்க அவர்கள் வேதங்களையே ஆதாரமாகக் கொண்டனர். புராணங்களை எதிர்ப்பதற்கு இரண்டு விதமான ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். ஒன்று: புராணங்களிலுள்ள முரண்பாடுகளையும் ஒரு புராணத்தின் கருத்து மற்றொன்றிற்கு எதிராக இருப்பதையும் இவர்கள் எடுத்துக்காட்டினார்கள். மற்றொன்று புராணக் கருத்துக்களை எதிர்க்கும் பெளத்த நூலான மணிமேகலையையும்15 சைவ நூலான நீலகேசியையும்16 தங்களுக்குத் துணையாகக் கொண்டார்கள், பெயர் குறிப்பிடாவிட்டாலும் வருண முறையில் பிராமணன் உயர்ந்தவன் என்ற கருத்தைப் பல ரிஷி மூலங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மறுக்கும் மணிமேகலை, நீலகேசிக் கருத்துக்கள், சாதி வரலாற்று நூலாசிரியர்களுக்கு வலுவளித்தன.

இவற்றிற்கெல்லாம் மேலாக 18ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தோன்றிய ‘கபிலரகவல்’ என்ற பாடல் இவர்களுக்குப் பெருந்துணையாக இருந்தது. இப்பாடல் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்னும் கருத்துடையது. ஆதி என்னும் புலைச்சிக்கும் பகவன் என்னும் பார்ப்பனனுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். அவர்களே கபிலர், வள்ளுவர், ஒளவை, அதியமான், உறுவை, வள்ளி, உப்பை முதலிய எழுவர். அவர்களில் கபிலர் அந்தணர் குலத்திலும் வள்ளுவர் பறையர் குலத்திலும் ஒளவை பரணர் குலத்திலும் அதியமான் அரசர் குலத்திலும் வள்ளி குறவர் குலத்திலும் உப்பை வண்ணார் குலத்திலும் உறுவை நாடார் குலத்திலும் வளர்ந்தனர். எக்குலத்தில் வளர்ந்தபோதிலும் மேன்மையடைந்து மக்களால் போற்றப்பட்டனர். சாதியினால் உயர்வு தாழ்வு இல்லை. கல்வி முதலிய தன்மைகளாலேயே உயர்வு தாழ்வு உண்டாகிறது என்ற கருத்தை இப்பாடல் வலியுறுத்துகிறது.

இதனோடு சித்தர் பாடல்களும் திருமூலர், திருமந்திரமும் இவர்களது சாதி சமத்துவக் கருத்துப் போராட்டத்திற்குத் துணை செய்தன.

சாதி யென்பதேதடா?

சமய மென்ப தேதடா?
என்பது போன்ற சித்தர் பாடல்கள், சாதியில் தாழ்த்தப்பட்டோருக்குப் போர் முழக்கமாக ஒலித்தன.

இவ்வாறாக அவர்கள் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் உள்ள நூல்களில் ஆதாரங்கள் திரட்டிப் பன்முகமான கொள்கைகளை வகுத்து, சாதி உயர்வு தாழ்வுகளை எதிர்த்துப் போராடக் கருத்துக்களையும் கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர்.