பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

19


ஆசாரிக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில் சம்வாதம் நடந்தது.

குண்டையன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை கூறினார். இந்த உரையாடலே நூலின் முதல் பகுதியாகும். அவ்வுரையாடலில் மார்க்கசகாயம் ஆசாரி கூறும் விவாதங்களின் சாரம் பின்னால் வரும் கோர்ட்டு வாக்குமூலத்தில் காணப்படுவதால் அவற்றை இங்கு கூறாமல் விட்டு விடுகின்றேன்.

மார்க்க சகாயம் ஆசாரி கூறிய விவாதங்களைக் கேட்டு, பஞ்சாயத்தார் அவர் பக்கமே தீர்ப்பளித்தார்கள். அத் தீர்ப்பில்,

இந்தப் பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் பாவ ருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தர்க்கித்ததற்கு மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாய்த் தெரிந்திருப்பதால் இனி விஸ்வப் பிரம்ம வம்சத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்தப் பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று
முடிவு செய்தார்கள்.

குண்டையனும் அவனைச் சேர்ந்த சிலரும் இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் அடிதடிச் சண்டை செய்தார்கள். இது குறித்து மார்க்க சகாயம் ஆசாரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பிராது செய்தார். இவ்வழக்கு சாட்சிகளால் ருசுவானபடியால் குண்டையனுக்கும் அவனைச் சார்ந்தோருக்கும் மாஜிஸ் திரேட் அபராதம் விதித்தார். விவாக நஷ்டத்தைப் பற்றிச் சிவில் கோர்ட்டில் பிராது கொடுக்கும்படியும் உத்திரவிட்டார்.

அவ்வாறே 1814இல் மார்க்கசகாயம் ஆசாரி முதலியோர் சித்தூர் ஜில்லா அதலாத்துக் கோர்ட்டில் பிராது கொடுத்தார்கள். அவர்களுடைய வாதங்களும் குண்டையன் முதலிய பிரதி வாதிகளின் மறுமொழியும் கோர்ட்டுத் தீர்ப்பில் விவரமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் அத்தீர்ப்பு முழுவதையும் இங்கே தருவோம். முதல் பகுதியில் காணப்படும் மார்க்க சகாயம் ஆசாரி-குண்டையன் சம்வாதம், இத்தீர்ப்பில் வாதி-பிரதி வாதிகளுடைய விவாதங்களின் விளக்கமாகவே இருப்பதால், இத்தீர்ப்பில் விடுபட்டுப் போன அம்சங்களை மட்டும் பின்னர் காண்போம்.