பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்

மேற்கூறிய சான்றுகளிலிருந்து கம்மாளர் தமது சாதி சமத்துவப் போராட்டங்களுக்கு ஏற்ற கருத்துக்களை எவ்வாறு உருவாக்கிக்கொண்டனர் என்பது விளங்குகிறது.

1. தங்கள் உற்பவம் பஞ்சமுகப் பிரம்மாவினிடமிருந்து என்று கூறுவதற்கு அவரகள் யசுர் வேதத்தைப் பயன் படுத்துகிறார்கள். எல்லாத் தொழில்களும் பிரம்மாவின் சிருஷ்டியாகையால் சாதிகள் சமமானவை என்று கூறுகிறார்கள்.
2. உழைப்பே உலக சம்ரட்சணைக்குச் காரணமென்றும் அருளைச் செய்வோரே சிருட்டிக் கர்த்தாவான பிரம்மாவின் வம்சமென்றும் வாதாடுகிறார்கள்.
3. உழைப்பைத் தாழ்மையானது என்று கூறுவதை அவர்கள் எதிர்க்கிறார்கள்.
4.புராணங்கள் திருமூர்த்தியின் தோற்றத்தை மறுபடக் கூறுவதால் அவையாவும் பொய்யென்று கூறுகிறார்கள்.
5. சாதிகள் தோன்றாத காலத்தில் மனித சமத்துவக் கருத்துக்களைக் கூறும் ரிக்வேதத்தையும் உழைப்பைப் போற்றுகிற யசுர் வேதத்தையும் இவர்கள் தங்கள் சாதிசமத்துவக் கருத்துக்களை உருவாக்கப் பயன் படுத்துகிறார்கள்.
6. புராணங்களைப் பொய்யென்று இவர்கள் கருதினாலும், பிராமணர்கள் சாதி உயர்வு தாழ்வுகளுக்கு அவற்றையே ஆதாரம் காட்டுவதால், பிராமணர்கள் துலமுதல்வர்களான ரிஷிகளின் தோற்றம் இழிவான சாதியோடு தொடர்புடையது, அவர்கள் சங்கர சாதியாரென்று காட்ட அதே புராணங்களைப் பயன் படுத்துகிறார்கள். இதைப் பிராமணர்கள் மறுக்க முடியாது.
7. மனுஸ்மிருதி, சாதி ஏற்றத் தாழ்வுகள் நிலை பெற்று விட்ட பின்பு, அவற்றை நிலைநிறுத்த வருணாச்சிரம ஒழுக்க விதிகள் கூறுவதால் அதனையும் இவர்கள் எதிர்க்கிறார்கள்.
8. உழைப்பை இவர்கள உயர்வெனக் கருதுவதால் எல்லோருக்கும் உணவளிக்கும் சூத்திரர்களும் சிறந்த குலத்தவரென்றும் வேத முதலிய ஞான நூல்களைப் படிக்கும் உரிமையுடையவர்களென்றும் கூறுகிறார்கள்.