பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

43

9. சாதி சமத்துவக் கொள்கைகளை உறுதியாக வாதிக்கும் கபிலரகவலை இவர்கள் தங்கள் கருத்துக்களை அரண் செய்யப் பயன்படுத்துகிறார்கள். வேளாளர், கார்காத்தார் முதலிய பிராமணரல்லாத உயர் சாதியினர் அப்பாடலின் பிராமண உயர்வை எதிர்க்கும் பகுதியோடு உடன்படுகின்றனர். மனிதகுலம் சாதியால் வேறுபடக்கூடாது என்ற கருத்தை இவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களுக்கு மேல் ஒரு சாதி இருக்கக்கூடாது என்று கருது கின்றனரேயன்றி, சாதி அமைப்பில் தங்களுடைய ஸ்தானத்தைவிட்டு இறங்கிச் சாதியால் உயர்வு தாழ்வு இல்லை என்று ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை.


இணைப்பு

கபிலரகவல்

(51ஆவது அடி முதல் பாடல் முடிவு வரை)

பார்ப்பன மாந்தர்கள் பகர்வது கேண்மின்
இறந்தவ ராயுமை இவ்விட மிருத்திப்
பாவனை மந்திரம் பலபட வுரைத்தே
உமக்கவர் புத்திரர் ஊட்டின போது
அடுபசியாற் குலைந்து ஆங்கவர் மீண்டு
கையேந்தி நிற்பது கண்டதார் புகல்வீர்.
அருந்திய உணவால் யார்பசி கழிந்தது?
ஒட்டியர் மிலேச்சர் ஊனர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்
பற்பலர் நாட்டிலும் பார்ப்பார் இல்லையால்.
முற்படைப் பதனில் வேறாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதியின் னாட்டினில் நாட்டினர்.
மேல்வகை கீழ்வகை விளங்குவ தொழுக்கால்.
பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறி
கலந்து கருப்பெறல் கண்டதும் உண்டோ?
ஒருவகைச் சாதியாய் மக்கட் பிறப்பில்
இருவகை யாகநீர் இயம்பிய குலத்தில்