பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டபோதும் அவர் இன்னும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற உணர்வே மிகுந்திருக்கிறது.

கலை, இலக்கியம், மதிப்பீடு, பண்பாடு, வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப் பண்பாட்டியல் என்று பல்வேறு துறைகளில் அவருடைய ஆக்க முறையிலான ஆய்வுகளும் முடிவுகளும் அவரை நம்மிடமிருந்து பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன.

ஆயினும், அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தவர்களுக்கு அவருடைய நூல்கள் மட்டுமே இந்த இழப்பை ஈடு செய்துவிட முடியாது என்பது உண்மைதான். பல்வேறு துறைகளில் பல நூறு கட்டுரைகளைத் தத்திருப்பினும், அவர் தனிப்பட்ட உரையாடல்களிலும் விவாதங்களிலும் வெளிப்படுத்திய கருத்துக்களும் செய்திகளும் ஆய்வு முடிவுகளும் எழுதப்பட்டு வெளியானவற்றைவிடப் பல பங்கு மிகுதியானவை. இவற்றையெல்லாம் எழுத்து வடிவில் பெறுவதற்கான வாய்ப்பைத் தமிழகம் இழந்துவிட்டதுதான் வேதனையானது.

உலகின் எந்த நாட்டில் இருந்தாலும், தமிழாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் பலர் அவரோடு தொடர்பு கொண்டு தமது ஆய்வுக்கான வழிகாட்டுதலைப் பெற்றனர். இவ்வாறு தேடிவந்த ஒவ்வொருவருக்கும் மணிக்கணக்கில்―நாள்கணக்கில் தமது பிற பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவர் நெறிப்படுத்தும் உதவியைச் செய்திருக்கிறார்.

அவருடைய நேரடி ஆய்வு மாணவர்கள் வாழ்நாள் முழுதும் பயன் பெறும் அளவில் அவரிடமிருந்து அறிவொளி பெற்றிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலான ஒரு மனிதனாக நின்று அவர் காட்டிய அன்பும் பற்றும் பாசமும் பழகியவர்களை நெகிழச் செய்திருக்கின்றன.

அவரோடு அறிமுகம் பெறும் வாய்ப்புப் பெற்றவர்களுக்கு இழப்பின் சுமையும் பிரிவின் வெம்மையும் தாங்கமுடியாததாக இருப்பதற்கு இதுவே அடிப்படையாகும்.

அவருடைய நினைவைப் போற்றும் வகையில் நாம் செய்ய வேண்டிய பணி அவரது படைப்புக்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதுதான்.