பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்

மன்மத பாண புஷ்பம்
மருக்கரளி ரோசா புஷ்பம்
பெண் கோதை மார்களெல்லாம்
பூரித்து வாங்கும் புஷ்பம்.


ஆத்துக்கு அருகாமையிலே
அடுத்திருக்கும் பூஞ்சோலை
பூஞ்சோலை தன்னை விட்டு
புறப்படுதென்னேரம்


புறப்படும் நேரமது
புண்ணியரே எஞ்சாமி
விருப்பமுடன் நான் வருவேன்
வேளையது தான் பார்த்து.


போகுறது ரோட்டுவழி
போயிச் சேரும் கோவில்பட்டி
ஏறுறது துரு மெயிலு
இறங்கறது மதுரையிலே.


மதுரை நகர் வீதியிலே
மல்லிகைப் பூ வாங்கித் தந்தால்
சொகுசான என் துரையே
சூட்டிருவேன் கொண்டையிலே.


அல்வாவும், மைசூர்பாவும்
அருமையான காராச் சேவும்
தல்லா குளம் போனவுடன்
தாராளமாய் வாங்கித்தாரேன்.


லட்டுமிட்டாய் பூந்திவடை
வெங்கச் சுருள் போளியடி
கட்டுக் கட்டாய் வாங்கித்தாரேன்
கட்டழக் உந்தனுக்கு.

(சேகரித்தவர்: எஸ். எஸ். போத்தையா)