பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்


பட்டிப் பிரதேசத்திலுள்ள கிராமங்களுக்கு வந்து அவர்களிடம் நல்ல கூலி கிடைக்குமென்று ஆசைகாட்டி அவர்களைத் தேயிலைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.மலைக்குப் போன பிறகுதான் அவர்களுக்கு வேலையின் கடுமை தெரியும். ஊரை நினைத்துப் பெருமூச்சு விடுவார்கள்.ஊரில் வேலை இல்லாதபோது ஊருக்குத் திரும்புவது முடியாத காரியம்.அவர்கள் வருந்திக் கண்ணீர் சொரிவார்கள். அவர்களது கண்ணில் தோய்ந்த பாடலே இது.

கொண்டையிலே பூவிருக்க
கொண்டுவந்த கங்காணி;
கொந்தரப்பு வேலையிலே
கொல்லுறானே கங்காணி !


ஏல மலைக்கு போனேன்;
ஏழெட்டு நாள் வேலை பார்த்தேன் ;
ஊரை நினைக்கையிலே
உருகுதையா எம்மனசு.


ஏலமலை யும் கண்டேன் ;
ஏலமலைத் தோட்டம் கண்டேன் ;
பாவிப்பய பஞ்சம் வந்து
பண்ணைப்புறம் கோம்பை கண்டேன்.

(சேகரித்தவர்-எஸ். எஸ். போத்தையா;

['கரும்புத் தோட்டத்திலே' என்ற பாரதியின் பாட்டை இப்பாடல் நினைவூட்டுகிறது. பாரதியும் கோவில்பட்டித் தாலுகாவில் எட்டையபுரத்தில் பிறந்தவர் என்பதை நினைவில் கொண்டால் அவர்காலத்திலும் புன்செய்நில உழவர்கள் பிழைப்பின்றி அக்கரைச் சீமைகளுக்குச் சென்றதைக் கண்டே அவர் உளம் வெதும்பி அப்பாடலைப் பாடியிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. இன்றும் இப்பாடல்கள் கோம்பை, குமிழி, பீர்மேடு முதலிய மலைத் தோட்டங்களிலும், கோவில்பட்டிச் சிற்றுார்களிலும் காற்றில் மிதந்துவரக் கேட்கலாம்.