பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 தமிழ் நூல் தொகுப்புக் கலை இந்தக் கருத்துக்கள் முற்றமுடிந்த முடிபுகள் அல்ல. இந்தக் கருத்துக்களைச் சிலர் அல்லது பலர் எள்ளி நகையாடவுஞ் செய்யலாம். எனவே, இந்தக் கருத்துக்கள் ஆராய்ச்சியாளரின் அறிவுப் பசிக்கு விட்ட ஒருவகை அறைகூவலேயாகும். இந்தப் புதிய கருத்துக்கள் ஒரு புறம் இருக்க, இனி ஈண்டுப் பழைய கருத்து ஒன்றினை நினைவு கூர்வோமாக; சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தமது உரைப்பாயிரத்தில், "இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் ......... முதலாவுள்ள தொன்னூல்கள் இறந்தன"-என ஒரு செய்தி அறிவித்துள்ளார்; இங்கே பெருநாரை, பெருங்குருகு என்னும் இரண்டும் இசைத்தமிழ் நூல்கள் எனக் கூறியுள்ளார். பெருநாரையும் முதுநாரையும் ஒன்றாகத்தானே இருக்க முடியும். பெருங்குருகும் முதுகுருகும் ஒன்றுதானே! எனவே, அடியார்க்கு நல்லாரின் உரையின்படி, முதுநாரை முதுகுருகு என்னும் இரண்டும் இசைத் தமிழ் நூல் கள் என்பது புலனாகும். இசைத் தமிழ் நூல் என்பது, இசைக்கு இலக்கணம் கூறும் நூலை மட்டும் குறிக்காது, இசைப்பாடல்கள் பல வற்றின் தொகுப்பு நூலையும் குறிக்கும். இந்தக் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் தொகுத்துள்ள, தமிழ் இசைப் பாடல்கள்’ என்னும் பெயரில் உள்ள தொகை நூல்கள் பலவற்றை ஈண்டு ஒப்பு நோக்கவேண்டும். இந்தத் தமிழ் இசைப் பாடல்கள் சுரதாள- இசையமைப்புடன் தொகுக்கப்பட்டுள்ளன. இவை போன்றே, முதுநாரை, முது குருகு என்னும் நூல்களும் இருக்கலாம் அல்லவா! அவ்வளவு ஏன்? பரிபாடல் என்னும் தொகைநூலையும் இசைத் தமிழ் நூல் எனக் கூறலாம். இன்று நமக்குக் கிடைத்துள்ள . கடைச் சங்க காலத் தொகைநூலாகிய பரிபாடல் என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு பாடலின் கீழும், இசையமைத்தவர் பெயரும், இசையின் (பண்ணின்) பெயரும் இருக்கக் காணலாம். பேரெல் லையாக நானூறு அடி நீளமுடைய பரிபாடலே இசைப்பாடல் என்றால், மிகவும் நீளமான முதுநாரை, முதுகுருகு என்னும் நூல்களும் இசைத்தமிழ் நூல்களாக இருக்கலா மல்லவா!