பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ் நூல் தொகுப்புக் கலை படைப்புக் கடவுளரும் பாவலரும்: படைப்புக் கடவுளாகிய நான்முகன் உயிருக்கு இடமாக் உடலைப் படைத்தாற்போல, பாவலர்கள் பொருளுக்கு கருத்துக்களுக்கு இடமாகப் பாடல்களைப் படைக்கின்றனர் என்னும் கருத்துப்பட, பவணந்தி முனிவர் தமது நன்னூலில், 'பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போற்பல சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்' (268) என்று கூறியுள்ளார். பவணந்தியாரினும் குமரகுருபர அடி களார் மிகவும் மேலே போய்விட்டார். 'நான்முகன் படைக்கும் உடம்புகள் நிலைக்காமல் அழிந்து போகும்; ஆனால், பாவலர் கள் படைக்கும் பாடல்களோ அழியாமல் புகழ்கொண்டு என்றும் நிலைத்து நிற்கும் என்பது குமர குருபரர் கூற்று. இதனை, அவர் இயற்றிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் உள்ள, 'கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு' + (6) என்னும் பாடல் நன்குணர்த்தும். உலகில் பன்னெடுங்கால மாகப் பன்னுாறாயிரங் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும்பாலான பெயர்கள் இன்று அறியப்படவில்லை. ஆனால், பாவலர் சிலரின் பெயர்கள் மட்டும் அவர்தம் நிலைத்த பாடல்களினால் இன்றும் அறியக் கிடக்கின்றன. அரசர்கள், வள்ளல்கள், மல்லர்கள் முதலான சில்லோர் பெயர்களும் அந்தப் பாடல்களின் வாயிலாகவே அறியப்படுகின்றன. இதனால், பாடற்கலையின் வரம்புகடந்த பெருமையும் பலதிறப்ப்ட்ட பயன்களும் நமக்கு நன்கு புலனா கும். அதனோடு பாவலர்களின் சிறப்பும் நனி விளங்கும்.