பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

129


ஆனை போல வந்தான்; பூனை போலப் போகிறான்.

ஆனை போனதே வீதி.

ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டி போகிறது வருத்தமா? 2995

(வழியிலே.)

ஆனை போன வீதியையும் கேட்க வேண்டுமா?

ஆனை போனாலும் அடிச்சுவடு போகாது.

ஆனை மதத்தால் கெட்டது; அரசன் பயத்தால் கெட்டான்.

ஆனை மதம் பட்டால் அழகாகும்; பூனை மதம் பட்டால் என்ன ஆகும்?

ஆனை மதம் பட்டால் காடு கொள்ளாது; சாது மதம் பட்டால் ஊர் கொள்ளாது. 3000

ஆனை மதர்த்தால் வாழைத்தண்டு; ஆண் பிள்ளை மதர்த்தால் கீரைத்தண்டு.

ஆனை மயிர் கட்டின ஆண் சிங்கம்.

ஆனை மிதித்த காசு பானை நிரம்பும்.

ஆனை மிதித்தால் பிழைப்பார்களா?

ஆனை மிதித்து ஆள் பிழைக்கவா? 3005

ஆனை மிதித்துக் கொல்லும்; புலி இடிந்து கொல்லும்.

ஆனை முட்டத் தாள்; வானம் முட்டப் போர்.

ஆனை முட்டத் தேர் நகரும்.

ஆனை முதல் எறும்பு வரைக்கும்.

ஆனை முன்னே ஆட்டுக்குட்டி; பின்னே சிங்கக்குட்டி. 3010

ஆனை முன்னே முயல் முக்கினது போல.

ஆனை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்த்தானாம்.

ஆனை மேய்கிற காட்டில் ஆட்டுக்குட்டிக்குப் புல் கிடைக்காமல் போகுமா?

(தழை கிடைக்காமல்.)

ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா?

ஆனைமேல் அங்கு மணி எடுத்தாலும் ஆனை வால் கூழை வால். 3015

ஆனைமேல் அங்குமணிச் சீர் எடுத்துக் கொண்டு வந்தாலும் மாமியார் இல்லை என்பாள்.

ஆனைமேல் அம்பாரி போனால் பூனைக்கு என்ன புகைச்சலா?

ஆனைமேல் அம்பாரி வைத்து வரிசை வந்தாலும் ஆனை வால் கூழை என்பார்.

ஆனைமேல் இடும் பாரத்தைப் பூனை மேல் இடலாமா?

(இடுகிறதா?)