பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

147


இராப் பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.

இராப் பட்டினி கிடந்தவனுக்குப் பாதித் தோசை போதாதா?

இராப் பட்டினி, பகல் கொட்டாவி. 3405

இராப் பட்டினி பாயோடே.

இராப் பிறந்த குழவி பகலிலே கத்தும்; பகல் பிறந்த குழந்தை இராவிலே கத்தும்.

இராப் பிறந்த பிள்ளையும் ஆகாது; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாது.

(பகல் பிறந்த பெண்ணும்.)

இராமனைப் போல் அரசன் இருந்தால் அனுமனைப் போல் சேவகன் இருப்பான்.

இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்றானாம். 3410

இராவணன் என்றால் படையும் நடுங்கும்.

இரிசிக்குப் புருஷன் ஆசை உண்டா?

(இரிசி-பேடி,)

இரிசியார் உடைமை இராத் தங்கப் போகாது.

இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டாற் போல்,

(படுக்கப் பாய் கேட்பான்.)

இருக்க இருக்க எல்லாம் இசைவாகும். 3415

இருக்கச் சாண் இடம் இல்லாமல் போனாலும் பெருக்கப் பெருக்கப் பேசுவதில் மாத்திரம் குறைவில்லை.

இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்னு.

இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும்.

இருக்கிற அன்றைக்கு எருமை மாடு தின்றாற் போல.

இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம். 3420

இருக்கிற இடத்தை விளக்கேற்றித்தான் பார்க்க வேண்டும்.

இருக்கிறது மூன்று மயிர்; அதில் இரண்டு புழுவெட்டு.

இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம்.

இருக்கிறபோது பெருங்கும்பம்; இல்லாத போது காவிக் கும்பம்.

இருக்கிற வரையில் இருள் மூடிச் போச்சாம்; செத்தவன் கண் செந்தாமரை என்றானாம். 3425