பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழ்ப் பழமொழிகள்


ஈடன் பாடு அஞ்சான்? கூழை எருது நுளம்புக்கு அஞ்சாது.

(ஈடன்-பலம் உள்ளவன், நுளம்பு-கொசு.)

ஈடு ஆகாதவனை எதிராக்காதே.

(எதிர்க்காதே.)

ஈடு இணை அற்றது. 3765

ஈடு உள்ள குடிக்குக் கேடு இல்லை.

ஈடும் எடுப்பும் இல்லாதது.

ஈடு ஜோடு எங்கும் கிடையாது.

ஈடு ஜோடு சொல்ல முடியாது.

ஈதல் உடையானை யாவரும் புகழ்வர்.

ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும்.

ஈப் பறக்க இசை கேடு வந்தாற் போல் ஆச்சுது.

ஈப்பாக்கு வைத்த மாதிரி.

ஈப்பிசினி இரப்பதுகூடக் கஞ்சிசம்.

ஈட்டி வாயன் தேடிக் கற்பூர வாயனுக்குக் கொடுத்தது போல. 3770

(யாழ்ப்பாண வழக்கு.)

ஈமக் கடனை எழுந்து முறை செய்.

ஈ முட்டுவது எருமைக்கடா முட்டுவது போல.

ஈயத்தைக் காதில் காய்ச்சி ஊற்றினாற் போல.

ஈயத்தைக் காய்ச்சலாம்; இரும்பைக் காய்ச்சலாமா?

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. 3775

(கண்டு.)

ஈயத்தைப் புடம் வைத்தால் ஈயம் வெள்ளி ஆகுமா?

ஈயப் பெருகும் பெருஞ் செல்வம்.

ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.

ஈயாத கருமிக்கு ஏராளச் செலவு.

ஈயாத பத்தினியிடம் ஈ என்றாலும், இல்லையே அது கொசு என்பாளாம். 3780

ஈயாத புல்லர் இருந்தென்ன? போய் என்ன?

ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.