பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தமிழ்ப் பழமொழிகள்


உண்டு என்று பெண் கொடுத்தால் சாதிகுலம் கேட்டானாம்.

உண்டு கண்ட பூனை உறியை உறியைத் தாவும்.

உண்டு களித்தவனிடம் சோற்றுக்குப் போ; உடுத்துக் களித்தவனிடம் துணிக்குப் போ.

உண்டு கெட்டவனும் தின்று கெட்டவனும் இல்லை. 3985

உண்டு கெட்டான் பார்ப்பான், உடுத்துக் கெட்டான் துலுக்கன்.

(உண்டு கழித்தவன், உடுத்துக் கழித்தவன்.)

உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இருக்குமா?

(இராது.)

உண்டு தின்று உயரமானால் ஊரிலே காரியம் என்ன?

உண்டு தின்று உள்ளே இரு என்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?

உண்டு ருசி கண்டவன் ஊரை விட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பேர்த்து அடி வையான். 3990

உண்டை பட்டு உறங்குகிற குருவிபோல.

உண்ண இலை தேடி உறங்கப் பாய் தேடிச் சிவனே என்று இருந்தேன்

உண்ண உணவும் நிற்க நிழலும்.

உண்ணக் கை சலித்திருக்கிறான்.

உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் ஒண்டக் கூரையும் வேண்டும். 3995

உண்ணப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.

உண்ணப் பார்த்தாலும் உழைக்கப் பாராதே,

உண்ண வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திற்றாம்.

உண்ண வருகிறாயோ சோம்பலே, உன் குறுணி அரை நாழிவேலைக்கு வருகிறாயோ சோம்பலே; நான் சற்றே நோயாளி.

உண்ண வா என்றால் குத்த வருகிறான். 4000

(வருகிறாய்.)

உண்ணவும் தின்னவும் என்னைக் கூப்பிடு; ஊர்க்கணக்குப் பார்க்க என் தம்பியை அழை.

உண்ணா உடம்பு உருகாது; தின்னாப் பாக்குச் சிவக்காது.

உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக் குறி இடுவேன்.

உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும், உடுக்காப் புடைவை புட்டிலாக்கும்.