பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தமிழ்ப் பழமொழிகள்


ஊர் நல்லதோ? வாய் நல்லதோ?

ஊர் நஷ்டம் ஊரிலே; தேர் நஷ்டம் தெருவிலே. 4700

ஊர்ப் பசங்களெல்லாம் கால் பாடம்; பிச்சைக்கு வந்த பெண் அகமுடையாள்.

ஊர்ப் பிள்ளையை முத்தமிட்டால் உதட்டுக்குக் கேடு.

(உதட்டுக்குத்தான் சேதம்.)

ஊர்ப் பொருளை உப்பு இல்லாமல் கூடச் சாப்பிடுவான்.

ஊர் பேர் அறியாதவன் ஊர்வலம் வருகிற மாதிரி.

ஊர் மெச்சப் பால் குடிக்கலாமா? 4705

ஊர் மேலே போனவளுக்குத் தோள்மேலே கொண்டையாம்; அதைப் போய்க் கேட்கப் போனால் லடாபுடா சண்டையாம்.

ஊர்வலத்தைக் காண வந்தவன் அடித்துக் கொள்வது போல.

ஊர் வாயை அடக்கினாலும் உளறு வாயை அடக்க முடியாது.

ஊர் வாயைப் படல் இட்டு மூடலாமா?

ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. 4710

ஊர் வாயை மூடலாமா? உலை வாயை மூடலாமா?

ஊர் வாரியில் ஒரு கொல்லையும் உத்தராட நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையும்.

ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம்.

ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும்.

(விளைந்தால்.)

ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு. 4715

ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான்.

ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான்.

ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.

(திரிகிறான்.)

ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே.

ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன். 4720

ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே.

ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.