பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

19


அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு. [யாழ்ப்பாண வழக்கு]

அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேறே வேணுமா?

அடர்த்தியை அப்போதே பார்; புணக்கத்தைப் பின்னாலே பார். 315

அடர உழு; அகல விதை.

அடர விதைத்து ஆழ உழு.

அட ராவணா என்றானாம்.

அடா என்பவன் வெளியே புறப்பட்டான்.

அடாது செய்தவர் படாது படுவர். 320

அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்.

அடி அதிசயமே, சீமைச் சரக்கே!

அடி அதிரசம்; குத்துக் கொழுக்கட்டை.

(பி-ம்.) அடி அப்பம்.

அடி அற்ற பனைபோல் விழுந்தான்.

அடி அற்ற மரம்போல அலறி விழுகிறது 325

(பா-ம்.) பனமரம் போல.

அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா?

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்.

அடி என்கிற ராஜாவும் இல்லை; பிடி என்கிற மந்திரியும் இல்லை.

(பா-ம்.) மந்திரியும் இல்லை, பிடி என்கிற ராஜாவும்.

அடி என்பதற்கு அவளைக் காணோம்; பிள்ளை பிறந்தால் ராம கிருஷ்ணன் என்று பெயர் வைக்கவேண்டுமென்று ஆசைப் பட்டானாம்.

அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; அஷ்ட புத்திரர்கள் எட்டுப்பேராம். 330

(பா-ம்.) புத்திரவெகு பாக்கியம் நமஸ்து.

அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை பெயர் அருணாசலமாம்.

அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்றானாம்.

அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம்.

அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்?

அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியது தானே? 335

அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.