பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

217


எண்ணெயைத் தேய்க்கலாம்; எழுத்தைத் தேய்க்க முடியாது. 5045

(எண்ணெயைத் துடைக்கலாம், எழுத்தை அழிக்க முடியுமா?)

எண்பது அடிக் கம்பத்தில் ஏறி ஆடினாலும் இறங்கி வந்துதான் சம்மானம் வாங்க வேண்டும்!

எண்பது வயசுக்கு மண் பவளம் கட்டிக் கொண்டாளாம்.

எண்பது வேண்டாம்; ஐம்பதும் முப்பதும் கொடு.

எண் மிகுத்தவனே திண் மிகுத்தவன்.

எத்தனை ஏழையானாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற் போகாது. 5050

(நாவிதன் கூற்று.)

எத்தனை சிரமம் இருந்தாலும் திண்டிக்குச் சிரமம் இல்லை.

எத்தனை தரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை தின்னான்.

எத்தனை தரம் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா?

(எத்தனை தேய்த்தாலும் போகாது.)

எத்தனை தேய்த்தாலும் பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை.

எத்தனை பாட்டுப் பாடினாலும் எனக்கு நீ அருகதையோ? 5055

எத்தனை பிரியமோ அத்தனை சவுக்கை.

எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும் தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது.

எத்தனைமுறை சொன்னாலும் பறங்கி வெற்றிலை போடமாட்டான்.

(தின்னான்.)

எத்தனை வந்தாலும் மிச்சம் இல்லை. 5060

எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்.

எத்தால் உரைத்தாலும் தட்டான் பவுனாக வளர்ந்ததாம் உண்டை.

எத்தால் கெட்டான் என்றால் நோரால் கெட்டான்.

(நோரு-வாய்.)

எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.

(பிழைக்கலாம்.)

எத்திக் கழுத்தை அறுக்கிறதா? 5065

எத்திலே பிள்ளை பெற்று இலவசத்திலே தாலாட்டுவது.

(இரவிலே தாலாட்டுவது.)