பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

83


ஆட்டைக்கு ஒரு முறை காணக் கோட்டை இல்லையோ?

ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுகிறான்.

ஆட்டைத் தேடி அயலார் கையில் கொடுப்பதைவிட வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது மேல். 1905

ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டு காடெங்கும் தேடினது போல.

ஆட்டை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தையோ?

ஆடடா சோமாசி, பெண்டாட்டி பாடையில் போய்ப் படுத்தாளாம்.

ஆடத் தெரியாத தேவடியாள் கூடம் கோணல் என்றாளாம்.

(பா-ம்.) கோணம், காணாது, போதாது.

ஆடப் பாடத் தெரியாதவருக்கு இரண்டு பங்கு உண்டு (+ என்ற கதை.) 1910

ஆடப்போன கங்கை அண்டையில் வந்தாற் போல.

ஆடம்பரம் டம்பம், அபிஷேகம் சூன்யம்.

ஆடமாட்டாத தேவடியாள் பந்தல் கோணல் என்றாளாம்.

(பா-ம்.) கூடம்.

ஆட மாட்டேன், பாட மாட்டேன், குடம் எடுத்துத் தண்ணீர்க்குப் போவேன்.

(வம்புப்பிரியை என்பது கருத்து.)

ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல. 1915

ஆடவன் செத்த பின்பு அறுதலிக்கும் புத்தி வந்தது.

ஆடவிட்டு நாடகம் பார்ப்பது போல்.

(பா-ம்.) வேடிக்கை பார்க்கிறதா

ஆடாச் சாதி ஊடாச் சாதியா?

ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு.

(பா-ம்.) அறுத்தாச்சு.

ஆடாததும் ஆடி ஐயனாருக்குக் காப்பும் அறுத்தாச்சு. 1920

ஆடாதே, ஆடாதே, கம்பங்கதிரே; அதற்கா பயந்தாய் சிட்டுக்குருவி?

ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும்.

(-ஆடி மாதம் மழை பெய்து, ஈரமண்ணில் காலடி புதையுமானால் கார்த்திகையிலும் அதற்குப் பின்னும் மழை இல்லை.)

ஆடி அடி பெருகும்; புரட்டாசி பொன் உருகும்.

ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில்.