பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தமிழ்ப் பழமொழிகள்


ஆடிப் பிறை தேடிப் பார்.

(பா-ம்.) தேடிப் பிடி.

ஆடிப் பெருங் காற்று.

ஆடி பிறந்தால் ஆசாரியார்; தை பிறந்தால் தச்சப்பயல்.

ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற. 1980

ஆடி பிறந்து ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை பிறந்தால் ஒரு சட்டி கறி ஆகும்.

ஆடி மாதத்தில் குத்தின குத்து ஆவணி மாதத்தில் உளைப்பு எடுத்ததாம்.

(பா-ம்.) வலி எடுத்ததாம்.

ஆடி மாதத்தில் நாய் போல.

ஆடி மாதத்தில் விதைத்த விதையும் ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.

ஆடி மாதம் அடி வைக்கக் கூடாது. 1985

ஆடிமாதம் அவரை போட்டால் கார்ர்த்திகை மாதம் காய்காய்க்கும்.

ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து, புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது.

ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா.

(பா-ம்.) மிடறும், வாயும்.

ஆடிய கூத்தும் பாடிய ராகமும்.

ஆடியில் ஆனை ஒத்த கடா, புரட்டாசியில் பூனைபோல ஆகும். 1990

ஆடியில் போடாத விதையும் அறுநான்கில் பிறக்காத பிள்ளையும் பிரயோசனம் இல்லை.

ஆடியில் விதை போட்டால் கார்த்திகையில் காய் காய்க்கும்.

ஆடி வரிசை தேடி வரும்.

ஆடி வாழை தேடி நடு.

ஆடி விதை தேடி நடு. 1995

(பா-ம்.) தேடிப்போடு; விதைக்க வேணும்.

ஆடி விதைப்பு, ஆவணி நடவு.

(பா-ம்.) ஆவணி முளைப்பு.

ஆடி வெப்பல் ஆட்டுக் கிடைக்குச் சமம்.

ஆடி வெள்ளம் ஓடி வர.

ஆடினது ஆலங்காடு; அமர்ந்தது தக்கோலம்; மணக்கோலம் பூண்டது மணவூர்.

ஆடு அடித்த வீட்டில், நாய் காத்தாற் போல. 2000