பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தமிழ்ப் பழமொழிகள்


ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.

ஆணுக்குக் கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்தல் ஆகாது. 2170

ஆணுக்குப் பெண் அழகு.

ஆணுக்குப் பெண் அஸ்தமித்துப் போச்சா?

ஆணுக்கு மீசை அழகு; ஆனைக்குத் தந்தம் அழகு.

ஆணும் அவலம்; பெண்ணும் பேரவலம்.

ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர். 2175

(பா-ம்.) பிடித்து வளர்; தட்டி வளர்.

ஆணையும் வேண்டாம்; சத்தியமும் வேண்டாம்; துணியைப் போட்டுத் தாண்டு.

(பா-ம்.) சந்தியும் வேண்டாம்.

ஆத்தாடி நீலியடி, ஆயிரம் பேரைக் கொன்றவன்டி,

(நீலி-ஔரி; அது மருந்தை முறிக்கும்.)

ஆத்தாள் அம்மணம்; அன்றாடம் கோதானம்.

ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.

(பா-ம்.) அன்றாடம் வீட்டில் கோதானம்.

ஆத்தாள் என்றால் சும்மா இருப்பான்; அக்காள் என்றால் மீசைமேல் கை போட்டுச் சண்டைக்கு வருவான். 2180

ஆத்தாள் படுகிற பாட்டுக்குள்ளே மகள் மோருக்கு அழுகிறாள்.

ஆத்தாள் வீட்டுப் பெருமை அண்ணன் தம்பியோடே சொல்லிக் கொண்டாளாம்.

ஆத்தாளும் மகளும் காத்தானுக்கு அடைக்கலம்; அவன் காத்தாலும் காத்தான்; கை விட்டாலும் விட்டான்.

ஆத்தாளை அக்காளைப் பேசுகிறதில் கோபம் இல்லை; அகமுடையாளைப் பேசுகிறதற்குத்தான் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது.

ஆத்தாளோடு போகிறவனுக்கு அக்காள் எது? தங்கச்சி ஏது? 2185

ஆத்தி நார் கிழித்தாற்போல் உன்னைக் கிழிக்கிறேன்.