பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

95


ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?

(பா-ம்.) அறியான்.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

(+ஆவேசம் கொண்டவனுக்கு மதியூகம் தட்டு.)

ஆத்திரத்துக்கு அவிசாரி ஆடினால் கோத்திரம் பட்ட பாடுபடுகிறது.

ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்; மூத்திரத்தை அடக்க முடியாது. 2190

(பா-ம்.) பொறுத்தாலும் பொறுக்காது; அடக்கப்படாது.

ஆத்திரப் பட்டவனுக்கு அப்போது இன்பம்.

ஆத்திரம் உடையான் தோத்திரம் அறியான்.

(பா-ம்.) கோத்திரம்.

ஆத்திரம் கழிந்தால் ஆண்டவன் ஏது?

ஆத்திரம் கஷ்டத்தைக் கொடுக்கும்.

(பா-ம்) நஷ்டத்தை.

ஆத்திரம் பெரிது; ஆனாலும் புத்தி மிகப் பெரிது. 2195

ஆத்திரம் பெரிது; ஆனாலும் மூத்திரம் பெரிது.

ஆத்தும சுத்தியாகிய நெஞ்சில் இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லக்ஷணம் தெரிந்து பலன் என்ன?

ஆத்துமத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.

ஆத்தூர் பாலூர் அழகான சீட்டஞ்சேரி, அழகு திருவானைக் கோவில் இருந்துண்ணும் விச்சூரு முப்போகம் நிலம் விளைத்தாலும் உப்புக்காகாத காவித்தண்டலம்.

(இவை செங்கற்பட்டுக் கருகிலுள்ள ஊர்கள்.)

ஆத்தூரான் பெண்டாட்டி ஆரோடோ போனாளாம்; சேத்தூரான் தண்டம் அழுதானாம். 2200

ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.

ஆத்தை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தாயோ.

(யாழ்ப்பாண வழக்கு.)

ஆத்ம சுத்தி என்கிற நெஞ்சிலக்கணம் தெரியாதவனுக்கு பஞ்ச லக்ஷணம் தெரிந்து என்ன பயன்?

ஆத்ம ஸ்துதி ஆறு அத்தியாயம்; பர நிந்தை பன்னிரண்டு அத்தியாயம்.

(பகவத்கீதையைப் பற்றியது.)