பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

199



பன்றிக் குட்டிக்குச் சங்கராந்தி ஏது?

(சோமவாரமா?)

பன்றிக்குட்டி பருத்தால் ஆனைக்குட்டி ஆகுமா?

பன்றிக்குத் தவிடு வைக்கப் போனாலும் உர் என்கிறது; கழுத்து அறுக்கப் போனாலும் உர் என்கிறது. 15805


பன்றிக்குத் தவிடு வைப்பது தெரியாது; கழுத்தை அறுப்பதும் தெரியாது.

பன்றிக்குப் பல குட்டி; சிங்கத்துக்கு ஒரு குட்டி.

பன்றிக்குப் பின் போன கன்றும் மலம் தின்னும்,

(பசுங்கன்றும்.)

பன்றிக்கும் பருவத்தில் அழகிடும்.

பன்றி பட்டால் அவனோடே; காட்டானை பட்டால் பங்கு. 15810


பன்றி பல ஈன்று என்ன ஆனைக்குட்டி ஒன்று போதாதா?

(குஞ்சரம் ஒன்று போதும்.)

பன்றி பல குட்டி; சிங்கம் ஒரு குட்டி.

பன்றி பல குட்டி போட்டாற் போல.

பன்றி புல் தின்றதனால் பயன் உண்டா?

பன்றியின் பின்னோடு பத்தெட்டும் போகிறது. 15815


பன்றி வேட்டையில் பகல் கால் முறிந்த நாய்க்கு இரவு கரிப் பானையைக் கண்டால் பயம்.

பன்னக்காரன் பெண்டிர் பணியக் கிடந்து செத்தான்; பரியாரி பெண்டிர் புழுத்துச் செத்தான்.

பன்னப் பன்னப் பல விதம் ஆகும்.

(தோன்றும். யாழ்ப்பாண வழக்கு.)

பன்னி உரைத்திடிலோ பாரதம் ஆம்.

பன்னிப் பழங்கதை படியாதே. 15820

(பேசாதே.)


பனங்காட்டில் இருந்து கொண்டு பால் குடித்தாலும் கள் என்பார்கள்.

பனங்காட்டில் மிரளுகிறதா?

பனங்காட்டு நாரி சலசலப்புக்கு அஞ்சுமா?

பனங்காயையும் பங்காளியையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்.

பனங்கிழங்கு முற்றினால் நாராகும். 15825


பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.

பனிக்காலம் பின்னிட்டது; இனிக் காலனுக்கும் பயம் இல்லை.

(போச்சுது.)