பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தமிழ்ப் பழமொழிகள்


வைத்தியம் கொஞ்சமாவது தெரியாத பேர் இல்லை.

வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.

வைத்தியம் பெரிதோ, மருந்து பெரிதோ?

வைத்தியம், ஜோசியம், சங்கீதம், மந்திரம் தெரியாதவர்கள் இல்லை. 21200


வைத்தியமோ, பைத்தியமோ?

வைத்தியன் உயிர் இருக்கும் வரையில் விட மாட்டான்; வைதிகன் உயிர் போன பிறகும் விடமாட்டான்.

வைத்தியன் காய்கறிக்குப் போனது போல.

வைத்தியன் கையைப் பார்த்து வாக்கு இட்டது போல.

வைத்தியன் கைவிட்டது போல, 21205


வைத்தியன் கொடுத்தால் மருந்து; இல்லாவிட்டால் மண்.

வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.

வைத்தியன் தகப்பனைப் போல.

வைத்தியன் தலைமாட்டில் இருந்து அழுதது போல.

வைத்தியன் பாராத நோய் தீருமா? 21210


வைத்தியன் பிள்ளைக்கு நோய் தீராது; வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.

வைத்தியன் பிள்ளை சாகானோ? வாத்தியார் பெண் அறுக்காளோ?

வைத்தியன் பிள்ளை நோயாளி; வாத்தியார் பிள்ளை கோமாளி.

வைத்தியன் பிள்ளை நோயினால் சாகாது; மருத்தினால் சாகும்.

வைத்தியன் பிள்ளையும் வாத்தியார் பிள்ளையும் முட்டாள். 21215


வைத்தியன் பிள்ளை வைத்தியன்.

வைத்தியன் பெண்டாட்டி சாகிறது இல்லையா? வாத்தியார் பெண் அறுக்கிறது இல்லையா?

(வைத்தியன் பெண்.)

வைத்தியன் பெரிதோ? மருந்து பெரிதோ.?

வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.

வைத்தியன் மருந்திலும் கை மருந்தே நலம். 21220


வைத்தியன் வீட்டில் சாவும் ஜோஸியன் வீட்டில் அறுக்கிறதும் இல்லையா?

வைத்தியன் வீட்டு நாய் வாதநோய் அறியாதாம்.

வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சிநேகிதம்.