பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

                        தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பரிபாடலிலும் பாடுதற்குச் சிறப்பு உரிமை உடையன என்பது தொல்காப்பியர் கருத்து.

     "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
      பாடல் சான்ற புலனெறி வழக்கம் 
      கலியே பரிபாட் டாயிரு பாவினும் 
      உரிய தாகும் என்மனார் புலவர் '
                                  (பொருள் அதிகாரம், 56) 
      இவ்விதிக்கு மாறாகச் சங்கத் தொகை நூல்களில் அகப் பொருள் செய்திகள் பெரும்பாலும் அகவற்பாவிலேயே அமைந்துள்ளன என்பது கவனிக்கத்தகும். தொல்காப்பியர் சங்கத் தொகை நூல்களுக்குப் பிற்பட்டவராயின், இங்ங்னம் நூற்பா செய்திருப்பாரோ என்பது எண்ணத் தகுவதாகும்.
   (13) தொல்காப்பியத்தில் சேயோன், மாயோன், வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங்களையும் கொற்றவையையும் எல்லா நிலத்திற்கும் உரியதாகிய கடவுளையும் குறித்துள்ளார் (பொருள் 5, 85), ஆயின், தொகை நூல்களில் முருகன், சிவன், கண்ணன், பலதேவன் ஆகிய நால்வரும் சிறப்புடைக் கடவுளராகப் போற்றப் பெற்றனர் (புறநானூறு 56, 58 முதலியன). ஞாயிறும் திங்களும் மழையும் தெய்வங்களாகச் சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்டன. காமன் வழிபாடும் இருந்தது (சிலம்பு, காதை 9, வரி 60) .

(14) பரிபாடல் அகப்பொருள் பற்றி வரும் என்றே தொல்காப்பியர் கூறியுள்ளார்.

           "கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு
            செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் 
            காமங் கண்ணிய நிலைமைத் தாகும்."
                                                        (செய், 121)
   இவ்விதிக்கு மாறாக இன்றுள்ள பரிபாடல்கள் பல கடவுள் வாழ்த்துப்பற்றி அமைந்துள்ளமை நோக்கத் தகும்.