பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


சுருக்கம், அவை பற்றிய இலக்கிய வரலாற்று ஆசிரியர் கருத்துக்கள் என்னும் முறையில் செய்திகள் காணப்படுகின்றன. இம்முறை வரவேற்கத்தக்கது.

ஏறத்தாழ இம்முறையைத் தழுவி வங்கமொழி இலக்கிய வரலாறு திருவாளர் தினேஷ் சந்திர சென் என்பவரால் 840 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் விலை ரூபாய் 25. மேலே காட்டப்பெற்ற முறையைத் தழுவித் தமிழிலக்கிய வரலாற்றை எழுத வேண்டும் என்னும் எண்ணம் எனக்குண்டாயிற்று.

யான் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாகவும் தமிழ்த்துறைத் தலைவனாகவும் இருந்த போது, தமிழிலக்கியம் பற்றி ஆறு சொற்பொழிவுகள் மதுரை மாவட்ட ஆசிரியர்களுக்கு ஆற்றவேண்டும் என்று கல்வித்துறை இயக்குநர் பத்மஸ்ரீ நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் ஆணை பிறப்பித்தனர், யான் அவ்வாணையின்படி மதுரை யூனியன் கிறிஸ்தியன் உயர் நிலைப்பள்ளியில் 1956 ஏப்ரலில் ஆறு சொற்பொழிவுகள் ஆற்றினேன். என் சொற்பொழிவு முறையில் நூலை எழுதும்படி ஆசிரியர் பலர் வற்புறுத்தினர். யான் அவர்கள் விருப்பத்திற்கிசைந்து அச்சொற்பொழிவுகளை அடிப்படையாகக்கொண்டு விரிந்த முறையில் தமிழிலக்கிய வரலாற்றை எழுதத் துணிந்தேன்.

பெரும்பாலரான தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு தமிழிலக்கியத்தையும் படித்துச் செய்திகளையறியப் போதிய நேரமோ வாய்ப்போ இல்லை ஆதலின் ஒவ்வொரு நூலைப்பற்றியும் சுருங்கிய முறையில் செய்திகளையறிய இலக்கிய வரலாற்று நூல் துணைபுரிய வேண்டும்-அந்நிலையிற்றான் அவர்கள் ஒவ்வொரு காலத் தமிழர் நாகரிகத்தையும் மொழி வளர்ச்சியினையும் மொழி மாறுதல்களையும் அறிதல் கூடும் என்னும் எண்ணம் உந்தியதால், ஒவ்வொரு நூலைப்பற்றியும் தேவையான செய்திகளை மட்டும் தருதல் நன்றெனத் துணிந்தேன்.

இம்முறையினால் நூல், அளவில் பெருகலாயிற்று. அதனால் சங்ககால இலக்கிய வரலாறு மட்டும் 600 பக்க்