பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பெயர் முதலியன

மதுரைப் பேராலவாயர், மதுரைக் குமரன் எனவரும் பெயர்களில் மதுரை என்பது ஊர்ப்பெயர்: பேராலவாயர், குமரன் என்பன இயற்பெயர்கள். இவ்வாறே வெள்ளுர்க் காப்பியன், காப்பியாற்றுக் காப்பியன் எனவரும் பெயர் களில் காப்பியன்’ என்பது இயற்பெயர். நக்கீரன், நப்பாலத்தன் என்றாற்போல வரும் பெயர்களில் 'ந' என் னும் சிறப்பு அடுத்து நிற்றல் போலப் பல்காயனார் தொல் காப்பியர் என்பவற்றிலும், பிற பெயர்களிலிருந்து பிரித்துக் காட்டப் பல்", "தொல்’ என்னும் அடைமொழிகள் சேர்க்கப் பெற்றன என்று கொள்வதே பொருத்தமுடையது. தமது பெயரையே தாம் செய்த நூலுக்குத் தோற்றுவித்தார் என்னும் கருத்திற்றான் பனம்பாரனார்,

"தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி"

எனக் கூறினார். எனவே, தொல்காப்பியன் என்பது ஒரு சொல் தன்மையில் வழங்கப்பெற்ற இயற்பெயர் என்று கோடலே தக்கது.

தொல்காப்பியர் தமிழகத்து நல்லாசிரியருடைய வழக் கையும் செய்யுளையும் அடியாகக்கொண்டு, செந்தமிழ் நாட்டுக்கு இயைந்த முன்னை இலக்கணங்களை முற்றக் கண்டு, எழுத்து-சொல்-பொருள் இலக்கணங்களை முறைப்பட ஆராய்ந்து தமது நூலைத் தொகுத்துச் செய்தார் என்பது பனம்பாரனார் பாயிரத்தால் தெரிகிறது.

தொல்காப்பியர் நிலந்தரு திருவிற் பாண்டியன் தலை நகரான கபாடபுரத்தில் அதங்கோட்டாசான் தலைமையிற் பனம்பாரனார் போன்ற புலவர் பெருமக்கள் கூடிய பேரவையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என்பது சிறப்புப் பாயிரத்தால் புலனாகிறது.