பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

115


"வேற்றுமை தாமே ஏழென மொழிய"

"விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே"

என்னும் நூற்பாக்கள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன.

தொல்காப்பியர் விளிவேற்றுமைக்குத் தனி இயல் வகுத்து அதன் இயல்புகளை முப்பத்தேழு நூற்பாக்களில் கூறியிருப்பதைக் கொண்டே, அஃது அக்காலத் தமிழில் பெற்றிருந்த முதன்மையை நாம் நன்குணரலாம். தொல் காப்பியர் வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு என்னும் மூன்று இயல்களாலும் வேற்றுமையை ஆராய் வதிலிருந்து, மொழி அமைப்பிற்கும் வழக்கிற்கும் வேற்றுமை எவ்வளவு இன்றியமையாதது என்பதனை நாம் தெளிவாக அறியலாம். தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்னும் இவ்வேற்றுமை பற்றிய ஆராய்ச்சி எந்த அளவு உயர்ந் திருப்பின் அவர் வேற்றுமைபற்றி மூன்று இயல்கள் கூறத் துணிந்தார் என்பது புலனாகும்.

தொல்காப்பியர் பெயர்ச் சொற்களையும் வினைச்சொற் களையும் தனித்தனி இயலில் அடுத்துக் கூறியுள்ளார். அடுத்து இடைச் சொற்களும் இவை என இரண்டு இயல் களில் உணர்த்தப்படுகின்றன.

கிளவியாக்கம் முதல் உரி இயல் ஈறாக எட்டு இயன் களிலும் விளக்கப்படாமல் எஞ்சி நிற்பனவற்றை ஆசிரியர் எச்சவியல் என்னும் ஒன்பதாம் இயலில் கூறியுள்ளார். மொழி, பேச்சுமொழி, நூல்மொழி, வேற்றுமொழி, கிளைமொழி எனப் பலவகைப்படும். ஒரு மொழியே, காலப்போக்கில் பேச்சுமொழி என்றும் நூல்மொழி என்றும் கிளைமொழி என்றும் இனமொழி என்றும் மாறுபாடும் பிரிவும் பெற்றுவிடும். மொழியறிவு நிறைவுபெற இவைபற்றிய அறிவு தேவைப்படும். தொல்காப்பியர் இவற்றைப் பற்றியும் கூறியுள்ளார்.