பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

யிலும் புலமை மிக்கவர். இவரது உரை எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களுக்கும் கிடைத்துள்ளது. இவர் தமது உரையில் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், பரி மேலழகர், ஆளவந்தபிள்ளை ஆசிரியர் ஆகிய உரையாசிரியர்களைக் குறிப்பிடுவதால் அவர்களுக்குப் பிற்பட்டவராவர்.

இவரது காலம் ஏறத்தாழப் பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டு என்று கூறலாம்.

தெய்வச்சிலையார்

தெய்வச்சிலையார் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டும் கிடைத்துள்ளது. செந்தமிழ் நாடு இன்னது என இளம் பூரணரும் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் கூறிய கூற்றைக் குறிப்பிட்டு இவர் மறுத்துள்ளார். அதனால் இவர் நச்சினார்க்கினியருக்கும் பிற்பட்டவர் என்பது தெளிவாகும். திருப்புல்லாணியில் உள்ள பெருமாளுக்குத் தெய்வச் சிலையார் என்பது பெயர். அப்பெயரைத் தாங்கியுள்ள இவ்வுரையாசிரியர் அப்பகுதியைச் சேர்ந்தவராகலாம்.

கல்லாடர்

கல்லாடர் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டுமே ஒலைச் சுவடிகளில் இருந்தது. அஃது இவ்யாண்டு அச்சாகியுள்ளது. கல்லாடர் முன்பு கூறப்பெற்ற உரையாசிரியருள் ஒருவராலும் குறிக்கப் பெறாமையால், அவர் அனைவருக்கும் பிற்பட்டவர் என்று கொள்ளுதல் பொருத்தமாகும். செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர்ச் சிவபெருமானுக்குக் கல்லாட ஈசுவரர் என்பது பெயர். எனவே, இன்றைய மீஞ்சூர் சங்க காலத்தில் கல்லாடம் எனப் பெயர் பெற்றிருந்தது எனலாம். சங்ககாலக் கல்லாடர் இவ்வூரினராதல் கூடும். பின் வந்த கல்லாடதேவ நாயனாரும் இத்தொல்காப்பிய உரை யாசிரியரான கல்லாடரும் இவ்வூரினர் எனக் கருதுதல் பொருத்தமாகும்.