பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வகைகளும், தாமரை, குவளை முதலிய நீர்ப் பூக்களும், நெருஞ்சி, பசும்புல் முதலிய படர் செடிகளும், கரும்பு, எள் முதலிய செடி வகைகளும், குன்றி ஆகிய கொடி வகைகளும் பேசப்படுகின்றன. விலங்குகளில் யானை, பசு, காளை, ஆடு, நரி, புலி, மான் முதலியன குறிக்கப்பட் டுள்ளன. ஆமை, முதலை, மீன் முதலிய நீர் வாழ்வனவும், காகம், கொக்கு, கோட்டான் முதலிய பறவைகளும் குறிக்கப்பட்டுள்ளன. ஆண் மக்களின் இயல்புகளும் பெண்மக்களின் இயல்புகளும் பேசப்பட்டுள்ளன. உழவு, வாணிகம், மக்களுடைய பழக்க வழக்கங்கள், ஆசிரமப் பாகுபாடுகள், சடங்குகள், போர்க்கருவிகள், உணவு, ஊர்திகள், பலவகை விளை யாட்டுகள், இசை, ஓவியம், சிற்பம் முதலிய கலைகள், உடை, அளவைப் பெயர்கள்; ஊருணி முதலிய நீர்நிலைகள், உடல் நலத்திற்கு உரியவை-எனப் பலதிறப்பட்ட செய்திகள் திருக்குறளுள் அடங்கியுள்ளன. திருமால் நெடுமாலாய் உலகளந்த வரலாறு, ததீசி வரலாறு முதலிய புராண வரலாறுகளைக் குறிக்கும் இடங்கள் இதனுள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் ஏறத்தாழ 50 வடசொற்கள் இருக்கின்றன.'17

       உரையாசிரியர்

உலகப் பொதுமறையாகிய திருக்குறளுக்கு உரை கண்டவர் பதின்மர் என்று பழம் பாடல் ஒன்று தெரிவிக்கின்றது. அவருள் இப்பொழுது அறியப் பெறுபவர் மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப் பெருமாள், பரிமேலழகர் ஆகிய ஐவருமேயாவர். இவருள் பரிமேலழகர், தமது உரையில் மற்ற உரையாசிரியர் கூற்றுகளைச் சில இடங்களில் மறுத்துக் கூறியுள்ளமையால் மேலே கூறப்பெற்ற நால்வரினும் காலத்தால் பிற்பட்டவராவர். இவர் காலம் கி. பி. 13ஆம் நூற்றாண்டு என்று திரு மு. இராகவையங்கார் அவர்கள் கூறுவர்.18 ______________________________ 17. திருக்குறள் உரைவளம், காமத்துப்பால், பக். 90. 18. சாஸனத் தமிழ்க்கவி சரிதம்; பக். 121-125.