பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஒழுக்கங்களுள் ஒவ்வொன்று பற்றியும் நூறு குறும் (சிறிய) பாக்களை உடையது; ஆதலால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இதன் பாக்களை நூலாகத் தொகுத்தவர் புலத் துறை முற்றிய கூடலூர் கிழார் என்பவர். இவரைக்கொண்டு இந்நூலைத் தொகுப்பித்தோன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆவன். கூடலூர் கிழார் இம்மன்னன் இறப்பைப் பற்றி வருந்திப் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் (229) இடம் பெற்றுள்ளது. எனவே, புறநானூற்றுப் பாடல்கள் தொகுக்கப்படுவதற்கு முன்பே இச் சேர வேந்தன் காலத்தில் ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்றது என்பது தெரிகிறதன்றோ? -

2. குறுந்தொகை : இந்நூலின் பாடல்கள் நானூறு. அவை நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையவை. இந்நூலைத் தொகுத்தவன் யூரிக்கோ என்பவன். தொகுப்பித்தவர் இன்னவர் என்பது தெரியவில்லை. இந்நூல் ஐங்குறுநூற்றை அடுத்துத் தொகுக்கப் பெற்றிருத்தல் வேண்டும்.
3. நற்றிணை : இது ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்ட நானூறு பாடல்களை உடையது. இப்பாக்கள் பன்னாடு தந்த மாறன் வழுதி என்பவன் தொகுப்பித்தவையாகும். தொகுத்தவர் பெயர் தெரிய வில்லை. இவன் பாடிய பாடல்கள் குறுந் தொகையிலும் (270) நற்றிணையிலும் (97, 301) இருப்பதைக்காண, இவன் சங்ககாலப் பாண்டிய வேந்தன் என்பது தெளிவு. எனவே, இந்நூலும் சங்ககால இறுதிக்குள் தொகுக்கப் பெற்றது எனக்கொள்வதே பொருத்தமாகும்.
4. அகநானூறு : இது பதின்மூன்றடிச் சிறுமையும் முப்பத் தோரடிப் பெருமையும் உடைய நானூறு பாக்களைக் கொண்ட தொகுப்பு நூல். இது 'நெடுந்தொகை' எனவும் கூறப்படுவதால் முன்பு தொகுக்கப்பட்ட மூன்று நூல்களுக்கும் முன்பு தொகுக்கப்பட்டது என்று கருதுதல் பொருத்தமாகும்.