பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு
ஏறத்தாழப் புலவர் ஐந்நூற்றுவர் பாடிய பாக்கள் இந் நூல்களில் இடம் பெற்றுள்ளன. அந்நல்லிசைப் புலவர் தமிழகத்துப் பல ஊர்களைச் சேர்ந்தவர்; பல்வேறு தொழிலினர் பல்வேறு காலத்தவர். அவருள் சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தரும் அரச மாதேவியரும் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறே சிற்றரசரும் அவர் தம் மக்களும், அந்தணர், வணிகர், வேளாளர் முதலி யோரும், ஆயர், மறவர், குறவர் முதலிய நிலமக்களும் இடம் பெற்றுள்ளனர். 
இத்தொகைநூற் பாடல்கள் பலதிறப் பொருளை உடையன. அரசர்களின் போர்த்திறங்களையும் வெற்றிச் சிறப்பையும் விரித்துக் கூறும் பாக்கள் பல; பேரரசர் சிற்றரசர் முதலியோர் வள்ளன்மையை எடுத்துரைக்கும் செய்யுட்கள் பல; கல்வியின் சிறப்பு, நல்லொழுக்கம், ஆட்சிமுறை, நாகரிகம் முதலியவற்றை அறிவுரை முறையில் அறிவிப்பன சில. மறக்குடி மகளிர் சிறப்பைத் தெரிவிப்பன சில; காதல் வாழ்வை விளக்குவன பல; குறிஞ்சி, பாலை, நெய்தல், முல்லை; மருதம் என்னும் ஐந்திணை ஒழுக்கங்களை அழகுற எடுத்துக் கூறுவன பலவாகும். இயற்கைக் காட்சிகளை இன்பம் ததும்ப எடுத்துரைப்பன பல. இவற்றுள் புராண இதிகாசச் செய்திகளும், தமிழர் பழக்க வழக்கங்களும், வேற்று நாட்டுச் செய்திகள் சிலவும், வரலாற்றுக் குறிப்புகள் பலவும் ஆங்காங்கு இடம் 

பெற்றுள்ளன.

இவ்வெட்டுத் தொகை நூல்களுள் வரலாற்றுக் குறிப்பு களை மிகுதியாகவுடைய புறநானூற்றின் காலத்தை அறியின், நாம் ஏறத்தாழச் சங்க காலத்தை அறிந்தவராவோம். ஆதலின் முதற்கண் புறநானூற்றின் காலத்தை இங்கு ஆராய்வோம்.