பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183


நெய்தல் பாடிய அம்மூவனார் சேரநாட்டுக் கடற்கரை ஊர்களாகிய தொண்டி, மாந்தை என்னும் ஊர்களை வளம்படப் பாடியுள்ளார். இவர் பாடியுள்ள தொண்டிப் பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கபிலர் குறிஞ்சித்திணை பாடுவதில் இணையற்றவர். இவர் பாடல்கள் சொற்செறிவும் பொருட் செறிவும் உடையவை.

பாரி பற்றிய பாக்களைப் பாடியவர் ஓதல் ஆந்தையார் என்பவர். ஓதல்-ஓதலூர். ஓதலூர் குட்ட நாட்டிலுள்ளது. இவர் பாலைத் திணையில் உள்ள மரங்கள், பூக்கள் இவை இவை என நன்கு பாடியுள்ளார்.

முல்லை பற்றிப் பாடிய பேயனார் சிறந்த புலவர் என்பது அவர் பாக்களாற் புலனாகிறது. சேர நாட்டில் சிறைக்கல் வட்டத்துப் பையனுார் முற்காலத்தில் பேயனுர் என வழங்கப்பட்டது. சேரமான் இமய வரம்பனைப் பாடிய கண்ணனார் பெயரால் கண்ணனூர்' என்பதும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய காக்கை பாடினியார் பெயரால் 'காக்கையூர்' என்பதும் தோன்றினாற்போல, இப்பேய னாரைச் சிறப்பித்தற்குப் பேயனுர் தோன்றியிருக்கலாம். மேலும் பேயன் என்ற பெயர் சேர நாட்டுக் கல்வெட்டு களில் காணப்படுகின்றது. எனவே, முல்லை பாடிய பேயனார் சேர நாட்டினர் என்று கருதலாம்.1

பேரரசரும் சிற்றரசரும்:

ஐங்குறுநூற்றுப் பாடல்களில் ஆதன் அவினி (செ. 1-10). குட்டுவன் (178) என்ற சேர வேந்தரும், கடுமான் கிள்ளி (78) என்ற சோழ மன்னனும், தென்னவன் (54) , தேர்வண் கோமான் (55), கொற்கைக் கோமான் (188) என்ற பாண்டிய அரசனும் குறிக்கப் பெற்றுள்ளனர்; விரான் என்ற சிற்றரசன் சேரநாட்டு இருப்பையூரைச் சேர்ந்தவன்; வரையாது வழங்குபவன் (58), மத்தி என்பவன் ஒரு சிற்றரசன்; கொடையிற் சிறந்தவன். கழாஅர் என்னும் ஊருக்குத் தலைவன் (செ. 61).

1 ஐங்குறுநூறு மூலமும் விளக்க வுரையும், பக். 194-5.