பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் மொழி— இலக்கிய வரலாறு

1. தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்

இத்தாலிமொழியைத் தாந்தே என்னும் கவிஞரும், ஆங்கில மொழியைச் சாஸர் என்னும் அறிஞரும், ஜெர்மன் மொழியை லூதர் என்பவரும், டச்சுமொழியைக் கிறிஸ்தியெர்ன் பெடெர்சன் என்னும் பெரியாரும் உண்டாக்கி வளர்த்தனர் என்று பழங்கால ஐரோப்பியர் நம்பி வந்தனர்.[1] இங்ஙனமே வடமொழியைப் பாணினிக்கும், தென்மொழியை அகத்தியருக்கும் சிவபெருமான் கற்பித்தார் என்று பழங்காலத் தமிழர் நம்பினர். ஆயின், மொழி மக்களது உள்ளூணர்விலிருந்து தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு கலை என்பது இன்றைய மொழிவல்லுநர் துணிவாகும்.

மொழியின் தோற்றம்

மலை நாட்டு மக்களாகிய கொண்டர், சவரர், துதவர் முதலியவர் உணர்ச்சிவயத்தால் ஆடுவர்; ஆடிக்கொண்டே பாடுவர். இவ்வாறே பழங்கால மக்களும் ஆடிய நேரங்களிலெல்லாம் வாய்க்கு வந்தவாறு பாடிவந்தனர். அவர்தம் பாடல்கள் முதற்கண் பொருளில்லா வெற்றொலிகளாக இருந்தன; நாளடைவில் படிப்படியாகப் பொருள்களை உணர்த்தத் தொடங்கின. ஒவ்வோர் ஒலியும் தான் தோன்றிய இடமும் காலமும் காரணமும் பற்றி ஒரு பொருளையோ தொழிலையோ உணர்த்தத் தொடங்கியது. இங்ஙனம்

த-2


  1. 1. Otto Jespersen, Mankind Nation and Individual, p. 51,