பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

19


குகையில் வாழ்ந்த மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெற்ற அறிவு வளர்ச்சியின் காரணமாகவே குடிசைவீடு கட்ட அறிந்தான்-கருங்கல் வீடு கட்டத் தெரிந்தான்-மண்ணைச் செங்கல்லாக்கிச் செங்கல் வீடு கட்ட அறிந்தான்-வானளாவிய மாடமாளிகை கட்டும் வன்மை பெற்றான். இவ்வாறு அவன் படிப்படியாகப் பெற்ற அறிவே மொழி வளர்ச்சியிலும் அவனுக்குத் துணைபுரிந்தது.

மனிதன் தனித்து வாழும்போது மொழி தேவையில்லை. அவன் பலருடன் கூடி வாழும் பொழுதே, அவருடன் கலந்து உறவாடவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் பொதுக்கருவி ஒன்று தேவைப்படுகிறது. அப்பொதுக்கருவியே மொழி எனப்படுவது. ஓரின மக்கள் தம் வாழ்க்கையை உயர்த்த உயர்த்த, அவ்வுயர் நிலைக்கு ஏற்பச் சொற்களும் தொகையில் பெருகுகின்றன; அஃதாவது, மொழி வளர்ச்சி அடைகின்றது. மனிதன் தன் தேவைக்குத் தக்கபடி அவ்வப் பொழுது பல பொருள்களைப் படைத்துக்கொள்வது போலவே அப்பொருள்களுக்குரிய சொற்களையும் படைத்துக்கொள்கிறான்; இங்ஙனமே பல்வேறு வகைப்பட்ட தன் செயல்களுக்கு உரிய சொற்களையும் ஆக்கிக்கொள்கிறான், நாகரிக வாழ்வும் கல்வி அறிவும் இல்லாது மலைப்பகுதிகளில் ஒதுங்கி வாழும் மக்களாகிய கொண்டர், சவரர், துதவர் முதலியோரிடம் அவர்தம் மொழிச் சொற்கள் தொகையில் சுருங்கி இருக்கின்றன. அவர்தம் அநாகரிக வாழ்வே இதற்குக் காரணமாகும். பல நாடுகளுக்கும் சென்று, பலரோடும் பழகிப் பெருவாழ்வு வாழ்ந்த தமிழர் தெலுங்கர் போன்றாரிடம் பல்லாயிரக்கணக்கான சொற்கள் இருக்கின்றன. இச்சொற்பெருக்கம் அவர்தம் நாகரிக வளர்ச்சியை நன்கு காட்டுகின்றது.

ஐவகை நிலம்

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். காடும் பசிய புல்வெளிகளும் உள்ள இடம் முல்லை எனப்படும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும்.