பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

21


வாழ்வு நடத்தினர். கால்நடைகளை மேயவிட்டு, அந்த ஓய்வு நேரத்தில் ஆம்பற் குழலும் வேய்ங்குழலும் ஊதி ஆடிப் பாடினர். அந்நிலத்தில் வளர்ந்த மரம், செடி, கொடி, பயிர் வகைகளைக் குறிக்கவும் தங்களுடைய தொழில்களைக் குறிக்கவும், பழக்க வழக்கங்களைக் குறிக்கவும், அவர்கள் உண்டாக்கிய கலைகளைக் குறிக்கவும் பல சொற்கள் தோன்றின.

வயலும் வயல் சார்ந்த நிலமுமாகிய மருத நிலத்தில் ஒழுங்கான முறையில் பயிர்த்தொழில் நடைபெற்றது. அதனால் அத்தொழில் வளர வளர, அதற்குரிய பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் பெருகின. அந்நிலத்தில் பயிரான மரம் செடி கொடிகளுக்கும், பிற உணவுப் பயிர்களுக்கும் தனித்தனியே பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறே அந்நிலத்தில் வாழ்ந்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெயர்கள் அமைந்தன. அந்நில மக்களுக்கும் அவர்கள் செய்து வந்த பலதுறைத் தொழில்களுக்கும் பெயர்கள் ஏற்பட்டன. ஓவியம், சிற்பம், நடனம், நாடகம், இசை, மருத்துவம் முதலிய பல கலைகளுக்கு உரிய சொற்களும் நாளடைவில் தோன்றின. மனித நாகரிகத்திற்கே மருத நிலம் தான் உயிர் நாடியானது. எனவே, பெரும்பாலான சொற்கள் மருத நிலத்தில்தான் தோன்றின என்பது உண்மையாகும்.

கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய நெய்தலில் வாழ்ந்த மக்கள் மீன் பிடித்தல், மீன் விற்றல், உப்பெடுத்தல், மீனை உப்புப்படுத்தல், கடலாடுதல் முதலிய தொழில்களைச் செய்தனர். கடலில் வாழும் உயிரினங்களுக்குப் பெயர்களை இட்ட முதல் மக்கள் இந்நெய்தல் நில மக்களேயாவர். இவர்தம் ஆடல் பாடல் முதலிய தொழில்களால் உண்டான சொற்கள் பல. ஓடம், தோணி, கப்பல், பாய்மரக் கப்பல், கலம் முதலிய சொற்களை உண்டாக்கியவர்களும் இவர்களே. பலவகை மீன்களுக்கும் இவர்கள் வைத்த