பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வழக்கம். ஊரில் நடைபெறும் விழாக்களில் விறலி நடிப்பது வழக்கம் (352).

பண்பாடு : அகநானூற்றுப் பாடல்கள் இன்பம் பற்றியன ஆயினும், தமிழர் பண்பாட்டை விளக்கும் உயர்ந்த கருத்துகளை ஆங்காங்குக் கொண்டுள்ளன. அவற்றுள் சில வற்றை இங்குக் காண்போம்:

(1) சான்றோர் மிக்க காதல் கொண்டாராயினும் பழியுடன் கூடிவரும் இன்பத்தினை விரும்பார் (112).

(2) பாவநெறியிற் செல்லாத வாழ்க்கையும், பிறன் மனை வாயிலில் சென்று நில்லாத மேம்பாடும் ஆகிய இரண்டும் பொருளினால் ஆகும் (15.5) ,

(3) உள்ளம் விரும்பிய வழியில் அதனைச் செல்ல விடாமல், விரும்பிய பொருளின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, உள்ளத்தை நல்லதன்வழிச் செலுத்துவதே பெரியோர் ஒழுக்கமாகும் (286) .

(4) இரப்பவரது ஏந்தும் கை நிறையும்படி மகிழ்ச்சி யோடு விரைந்துவந்து புதிய பொருள்களைத் தந்து மகிழு வதற்கே அரிய செல்வத்தை ஈட்டவேண்டும் (389) .

இத்தகைய உயர்ந்த பண்பாடுடைய தமிழ் மக்கள் வாழ்ந்த காலமே சங்ககாலம்.

புராண இதிகாசக் கதைகள் : கண்ணன் யமுனைத் துறையில் நீராடிய கோவியர் ஆடைகளைக் கவர்ந்தமை, முருகன் சூரனைக் கொன்றமை இராமன் கோடிக்கரையில் பறவைகள் ஒலியை அடக்கினமை, பரசுராமன் மன்னர் மரபை அழித்தமை போன்ற சில கதை நிகழ்ச்சிகள் அக நானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன (59, 70, 220 முதலியன).

வடசொற்கள் : இந்நூற் பாடல்களில் வடசொற்கள் தமிழ் உருப்பெற்றும் பெறாமலும் வழங்கப்பெற்றுள்ளன. நிதி (60), இராமன் (70) , வதுவை (86) , அரமியம் (124) , விதி (147), கலாபம் (152), சிகரம் (181), சிமயம் (208), பதி (299), தேயம் (333). இவை போன்ற சில சொற்களே இந்நூலில் இட்ம் பெற்றுள்ளன்.