பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கலித்தொகையின் காலம்

1. கலித்தொகைச் செய்யுட்கள் பெரும்பாலும் பொருளியல் சூத்திரங்களுக்கு இலக்கியமாய் அமைந்தவை: கைக்கிளை, பெருந்திணைச் செய்யுட்களை உடையவை.

2. "மையின் மதியின் விளங்க

                       முகத்தாரை
    வவ்விக் கொளலும் அறனெனக் 
                      கண்டன்று."
              --குறிஞ்சிக்கலி - 26.

பெண்டிரை வெளவிக்கோடல் 'இராக்கத மணம்' எனப்படும். இராக்கத மணத்தைத் தொல்காப்பியர் கூறிலர். 'பெருந்திணை-ஒவ்வாத காமம்' எனத் தொல்காப்பியர் கூறினரே அன்றி, இராக்கத மணமுறையாகிய வெளவிக் கோடலைத் தமிழ் மக்கள் கையாண்டனர் என்று கூறிலர். 'இராக்கத மணம் அறன்' எனத் தொல்காப்பியரோ சங்க நூற் புலவரோ யாண்டும் கூறிலர். ஆரியருடைய எண் வகை மணங்களுள் 'இராக்கத மணம்' ஒன்றாகும். தமிழர்க்கு இம்மணம் உண்டெனக் கூறச் சங்க இலக்கியச் சான்றில்லை. அடியோர் தலைவராகக் கொள்ளினும், தமிழகத்துள் அடிப்பட்ட பழக்கத்துக்கு மாறாகச் சங்கத்துச் சான்றோர் செய்யுள் செய்யார். ஆகவே, இராக்கத மணம் அறன்’ எனக் கூறும் இச் செய்யுளும் இதுபோன்ற கலிச் செய்யுட்களும் கடைச் சங்கப் புலவருக்குப் பிற்பட்ட காலத்தனவாகும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

3. குறிஞ்சிக்கலிச் செய்யுள் ஒன்றில் தலைவி, "தோழி, நீ தெருவில் போவார்க்கெல்லாம் இரங்குதல் வாரணவாசியில் (காசியில்) பிறர் வருத்தம் தம் வருத்தமாகக் கருதும் அருளுடையார் செயலை ஒத்துள்ளதே," (24) எனக் கூறியுள்ளது கருதற்பாலது. ஏனைய தொகை நூல்களுள், இச்செய்தி காணப்பட்டிலது. வாரணவாசி (காசி) நகர மாந்தர் செய்தி எந்த அளவு தமிழகத்தில் பரவி இருந்தால், அதனைத் தலைமகள் சொல்வதாகப் புலவர் பாடியிருப்பர் என்பது சிந்திக்கத் தக்கது. ஏனைய பழம்பாடல்களில்