பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பலவற்றில் புராணக் கதைகளும், தெய்வங்களுமே குறிப்பிடப் பட்டுள்ளன. ஏனைய அகப்பாட்டுகளில் பெரும்பாலான செய்யுட்களில் வந்துள்ள தமிழ்ப்புலவர் பெயர்கள், வள்ளல் களின் பெயர்கள், அரசர்கள் பெயர்கள், போர்கள் முதலியன போன்ற தமிழகச் செய்திகளுள் ஒன்றேனும் 149 செய்யுட் களைக் கொண்ட கலித்தொகையில் பயின்றுவராமை நன்கு கவனித்தற்குரியது. இத்தகைய காரணம் கொண்டே கலித் தொகைச் செய்யுட்கள் பிற அகப்பொருள் நூல்கட்குப் பின்னரே செய்யப்பட்டவை எனக் கூறலாம். -

கபிலர், பரணர், நக்கீரர் போன்ற சங்கத்துச் சான்றோர் அகனைந்திணை பற்றிய பாடல்களையே பாடியுள்ளனர்; தொல்காப்பியப் பொருளியல் விதிகட்குரிய பாக்களைப் பாட வில்லை. அக்குறையை நீக்கவே அப்புலவர்கட்குப் பின்பு தோன்றிய புலவர் ஒருவர் இந்நூலைப் பாடியிருத்தல் கூடும். இந்நூலில் பாண்டியநாடு ஒன்றே குறிக்கப்பட்டுள்ளது: பாண்டியனே பாராட்டப்பட்டுள்ளான். எனவே, கலித் தொகை பாடிய புலவர் பாண்டிய நாட்டினராயிருத்தல் கூடும்.

கலித்தொகையில் பாண்டியன், அவன் தலைநகரான மதுரை, வையை ஆறு, பொதியில்மலை, அவனது நேர்மை யான ஆட்சி என்பன இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் பாண்டியர் வளர்த்த தமிழ்ச் சங்கம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. முன்பு குறிப்பிட்டதுபோல் சேர, சோழர் பற்றியோ புகழ்பெற்ற குறுநில மன்னரைப் பற்றியோ ஒரு சிறு குறிப்பும் இந்நூலில் இடம் பெறவில்லை. இவை அனைத்தையும் நடுவு நிலையிலிருந்து நோக்க, பிற புலவர்கள் பாடாது விட்ட பொருளியல் விதிகட்கேற்ற பாடல்களைக் கொண்ட இக்கலித்தொகை என்னும் நூல், சங்க காலத்தின் இறுதியில்-களப்பிரர் படையெடுப்புக்குச் சிறிது முற்பட்ட காலத்தில்-பாண்டியன் மீதும் அவனது நாட்டின் மீதும் அளவற்ற பற்றுக்கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர் ஒருவரால் பாடப்பட்டிருத்தல் வேண்டும் என்று கொள்வது