பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழ் மொழி—இலக்கிய வரலாறு


tions), சொற்றொடர் அமைப்புகள் முதலிய எல்லாவற்றையும் ஒப்புமையாக்க முறையினால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய ஒப்புமையாக்க முறை இளம்பருவத்திலேயே நன்றாகப் பதிந்து பழகிவிடும் வாய்ப்புத் தாய்மொழியில் உள்ளது.[1]

அச்சம், ஆவல், நாகரிக வளர்ச்சி முதலியவை பற்றியும் புதிய சொற்கள் தோன்றுவது உண்டு. பண்டை மக்கள் இறப்பை அஞ்சினர்; அதனால் இறந்தார், செத்தார் என்னும் சொற்களைச் சொல்லவும் தயங்கினர்; இவற்றுக்குப் பதிலாகத் ‘துஞ்சினார்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தினர்; பின்பு தத்தம் சமயத்திற்கேற்றவாறு ‘சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்’ எனவும், ‘திருநாட்டுக்கு எழுந்தருளினார்’ எனவும், ‘பரமபதம் அடைந்தார்’ எனவும், ‘காலமானார்’ எனவும் கூறலாயினர். ‘உயிர் போய்விட்டது’ என்று சொல்லத் தயங்கி, அக்கருத்தையே உணர்த்தும் ‘குளிர்ந்துபோய்விட்டது’ என்பதை மக்கள் கூறுகின்றனர். மக்களுடைய ஆட்சியே இலக்கண வழக்கில் ஏறுவது மரபு ஆதலின், மக்கள் இவ்வாறு சொல்வது ‘தகுதி’ என்றும், ‘மங்கல வழக்கு’ என்றும் சான்றோர் இவற்றை ஏற்றுக்கொண்டனர்.

திருமகளின் பொலிவு என்று விளக்கைப் போற்றும் வழக்கம் நம்நாட்டில் உண்டு. பெண்கள் விளக்கேற்றியவுடன் அதற்கு வணக்கம் புரிதலைக் காணலாம். இதனால், ‘விளக்கை அணை’, ‘நிறுத்து’ என்று கூறுதல் அமங்கலம் என்றும், அவ்வாறு கூறுவதால் திருமகளின் அருள் நீங்குமென்றும் மக்கள் அஞ்சுகின்றனர். இந்த அச்சத்தால் (விளக்கை) அமர்த்து, (விளக்கைக்) குளிரவை என்பன போன்ற புதிய சொற்கள் தோன்றியுள்ளன.[2]


  1. டாக்டர். மு. வரதராசனார், மொழி வரலாறு, பக். 34-35.
  2. ௸, பக். 49-50.