பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/281

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

279

கடம்பர் என்னும் இனத்தவரை இமயவரம்பனும் செங்குட்டுவனும் தத்தம் காலத்தில் கடற்போரில் முறியடித்துக் கடல் வாணிகத்தை நிலைநிறுத்தினர். நெடுஞ்சேரலாதன் தன்னுடன் போரிட்ட ஆரியரையும் யவனரையும் முறியடித்தான்; யவனர் கைகளைப் பின்பக்கமாகக் கட்டி அவர் தம் தலைகளில் நெய்யைப் பெய்து, தனது வஞ்சி நகரத்திற்கு அழைத்து வந்தான்; அவர்களிடம் இருந்த சிறந்த அணிகளையும் வைரக் கற்களையும் எடுத்துக்கொண்டான். இமயவரம்பன் தான் வென்ற ஏழு அரசர்களின் பொன் முடிகளை உருக்கித் தனது வெற்றிக்கு அறிகுறியாகப் பொன் மாலை ஒன்றை அணிந்திருந்தான். அஃது ‘எழுமுடி மாலை’ எனப்பட்டது. செங்குட்டுவனும் அதனை அணிந்திருந்தான்.

செங்குட்டுவனின் வீரச் செயல்களைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் அதியமானுடன் போரிட்டுத் தகடூரை அழித்தான்; கழுவுள் என்னும் ஆயர் தலைவனை வென்றான், இளஞ்சேரல் இரும் பொறை இருபெரும் வேந்தரையும் விச்சிக் கோவையும் ஒரு போரில் முறியடித்தான்.

கொடைச் சிறப்பு: இமயவரம்பன் முதல் எல்லாச் சேர மன்னரும் முத்தமிழ் வாணரைப் பலவகைப்பட்ட பரிசில்களை நல்கி மகிழ்வித்தனர். இவர்கள் ‘பாடினி வேந்து, பரிசிலர் செல்வம்’ என்று தனித்தனியே பாராட்டப் பெற்றனர்; புலவர்களுடன் இருந்து உண்டு மகிழ்ந்தனர். இரவலர் பசியோடு தம்மை நோக்கிய பார்வையைக் கண்டு அஞ்சினர்; போர்களில் கிடைத்த பொருள்களை முத்தமிழ் வாணர்க்கு அளித்து மகிழ்ந்தனர். செல்வக் கடுங்கோ வாழியாதன் கொடுமணம் என்னும் ஊரில் கிடைத்த விலையுயர்ந்த அணிகளையும், பந்தர் என்னும் ஊரில் கிடைத்த முத்துகளையும் பரிசிலர்க்கு வழங்கி மகிழ்ந்தவன் (37), இவர்கள் தம்மைப் பாடிய புலவர்களுக்கு