பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

நாட்டின் சில பகுதிகளையும், சில பகுதிகளின்வருவாயையும் கொடுத்ததிலிருந்தே இவர்தம் கொடைத்திறனை நாம் நன்கு அறியலாம்.

ஆட்சிச் சிறப்பு : சேரமன்னர் காட்டில் வாழ்ந்த, முனிவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தனர்; தம் நாட்டுப் பெருவழிகளைப் பாதுகாத்தனர்; நீர் நிலைகளைப் பெருக்கினர்; கடல் வாணிகத்தை வளர்த்தனர்; உள்நாட்டு வாணிகத்தையும் வளப்படுத்தினர்; தளர்ந்த குடிமக்களை உயர்த்தப் பாடுபட்டனர்; நாட்டு வருவாயை அறம் முதலிய பல துறைகளுக்கும் தனித்தனியே பிரித்துச் செலவிட்டனர்: நெடுஞ்சாலைகளில் இனிய பழம் தரும் மரங்களை வைத்து வளர்த்தனர்.

இம்மன்னர்தம் நல்லியல்புகளையும் ஆட்சிச் சிறப்பையும்: ஒவ்வொரு பத்தையும் படித்து அறிவது நல்லது.

போர்பற்றிய விவரங்கள்

படையெடுப்பு : ஒரு நாட்டின்மீது படையெடுக்கும் அரசனுடைய வீரர்கள் முதலில் தங்கள் முரசத்திற்குச் செந்தினையையும் குருதியையும் பலியாகத் தூவுவர்; குருதியால் அதன் கண்ணைத் துடைப்பர்; பின்பு அதனைக் குறுந்தடி கொண்டு முழக்குவர் (9) . உடனே படையில் ஆரவாரம் உண்டாகும்.

குதிரை வீரர்கள் விரைந்து செல்லும் குதிரைகள் மீது இவர்ந்து செல்வர். தேர்ப்படை வீரர் நீண்ட கொடியினையுடைய தேர்கள்மீது ஏறிச்செல்வர். யானை வீரர் யானைகள் கழுத்தின்மீது அமர்ந்து போர்க்கருவிகளை ஏந்திச் செல்வர் காலாட்படையினர் வாள், வேல், வில் முதலிய கருவிகளை ஏந்திச் செல்வர். மன்னன் நெற்றிப் பட்டத்தையும் பொன்னரி மாலையையும் அணிந்த யானையின்மீது, இவர்ந்து செல்வான் (34) .