பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


"கடவுளர்' என்று கூறப்பட்டனர் (21). உண்ணாநோன்பு மேற்கொண்ட விரதியர் கோவில் மணி அடித்ததும் விடியற் காலையில் குளிர்ந்த நீர்த்துறைக்குச் சென்று நீராடுவர்; பின்பு திருமாலின் அடியில் வணங்கி அப்பெருமானை வாழ்த்திடுவர் (31). இங்குக் குறிப்பிட்ட திருமால் திருவனந்தபுரத்துத் திருமால் என்று பழைய உரைகாரர் கூறியுள்ளனர். (31) . இஃது உண்மையாயின், அவ்வூர்த் திருமால் சங்க காலமுதலே புகழ்பெற்றுவருபவர் என்பது அறியப்படும்.

பெருஞ்சேரல் இரும்பொறை அரிய மறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்டான்; அவர் உரைத்த விரதங்களை மேற்கொண்டு ஒழுகினான்; அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த நன்மக்கள் உள்ளம் மகிழும்படி வேள்விகளைச் செய்து முடித்தான் (74). அவன் தன் புரோகிதனைத் துறவு மேற் கொள்ளும்படி செய்தான். கொடை, மன அமைதி, செல்வம், மகப்பேறு, தெய்வ உணர்வு முதலியன தவ முடையார்க்கு உண்டாகும் என்பதை அறிவுறுத்தி அப்புரோகிதனை மன்னன் தவம் செய்யும்படி காட்டிற்கு அனுப்பினான் (74). இதனால் அம்மன்னன் தவத்தில் கொண்டி ருந்த நம்பிக்கையை நாம் நன்குணரலாம், சேரநாட்டில் அயிரை மலை மிகச் சிறந்தது. அதன் மீது கொற்றவை கோவில் இருந்தது. சேர மன்னர் கொற்றவையை வழி பட்டனர். "கொற்றவை வீற்றிருக்கும் அயிரைமலை போல நின் புகழ் நிலைபெற்று விளங்குக, என்று அரிசில் கிழார் பெருஞ்சேரல் இரும்பொறையை வாழ்த்தினார் (79) .

போருக்குச் செல்லும்போது போரில் வெற்றி உண்டாவதற்காகச் சேர மன்னர் அயிரை மலைக் கொற்றவையைப் பரவுவது வழக்கம் (88). சேர நாட்டு வீரர் தம் விழுப் புண்ணில் சொரியும் குருதி கலந்த சோற்றுத் திரளைப் படைத்து அயிரை மலைக் கொற்றவையை வழிபடுவது மரபு (79, 88). -