பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


வடமொழியாளர் செல்வாக்கு

முருகன் பிணிமுகம் என்னும் யானையை ஊர்ந்தமை {11), தலையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரதத்தில் குறிக்கப்பட்ட அக்குரன் ஈகைத் தன்மை (14) என்பன இந்நூலிற் குறிக்கப்பட்ட கதைகளாகும்.

எட்டுப் பத்துகளையும் பாடிய புலவர் எண்மருள் குமட்டூர்க் கண்ணனார், பாலைக் கோதமனார், பரணர், கபிலர் ஆகிய நால்வரும் அந்தணப்புலவர் ஆவர். இப்பாடல்களில் வேத வேள்விகள் குறிக்கப்பட்டுள்ளன. சான்றாகப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக் கெளதமனார் விருப்பப்படி பத்துப் பெருவேள்விகளைச் செய்வித்தான் என்பது மூன்றாம் பத்தின் பதிகத்தால் அறியத்தகும்.

பாலைக் கெளதமனார் போன்ற அந்தணப் புலவர் நால்வர் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றிருப்பினும், அவர் பாடல்கள் பிற தமிழ்ப் புலவர் பாடல்களைப் போலவே சொற்செறிவும் பொருட்செறிவும் பெற்று விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தகும். அப் புலவர் பெருமக்கள் தமிழ் இலக்கண வரம்பில் நின்று, தமிழ் வழி வந்த சான்றோர் போலவே, உயர்ந்த முறையில் பாடியுள்ளனர் என்று கூறுதல் தகும். அதனாற்றான். மிகச் சில வட சொற்களே இந்நூலிற் பயின்றுள்ளன.

வேதங்களில் வல்ல மறையவரைச் சேர மன்னர் மதித்தனர்; அவர்களைக் கொண்டு வேள்விகளைச் செய்வித்தனர்; அவர்களுக்குப் பல ஊர்களை அளித்தனர்; அவர்களைத் தம் குருமார்களாகக் கொண்டனர் என்பன போன்ற செய்திகள், இச் சேர வேந்தர் காலத்தில் வேத நெறியினர் சேர நாட்டில் பெற்றிருந்த செல்வாக்கை இனிது உணர்த்து வனவாகும். -