பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

299


வாழ்க்கையின் இறுதியில் யமன் உயிரைக் கொண்டு செல்லுதல் உறுதி. ஆதலால் நல்வினைகளைச் செய்யுங்கள்: அவற்றைச் செய்ய முடியவில்லையாயின் தீவினையாவது செய்யாதிருங்கள். அதுவே நன்னெறியில் செலுத்தவல்லது' (195) என்பது ஒரு புலவர் அறிவுரையாகும். மற்றொரு புலவர், நல்லது செய்வோர் துறக்கம் பெறுவர்-அல்லது செய்பவர் மாறிப் பிறப்பர், (214) என்று கூறியுள்ளார்.

தமிழர் வடநாட்டு அறிவு : இமயமலை அடிவாரத்தில் அந்தணர் இருந்து வேள்வி செய்தனர் (2). அங்குக் கவரிமான்கள் நரந்தையையும் நறும்புல்லையும் மேய்ந்து சுனைநீரைப் பருகித் தகரமர நிழலில் தங்கும் (132) . இமயமலை உயர்ந்த நெடிய பக்க வரைகளை உடையது (166) .

பண்பாடு : அன்புடைமை, அருளுடைமை, பண்புடைமை முதலிய நற்பண்புகளின் சேர்க்கையே பண்பாடு என்பது. அது சொல்லிலும் செயலிலும் வெளிப்படுவது: வயலில் அறுவடை செய்யும் உழவர் அங்குத் தமக்குத் தெரியாமல் வாழும் பறவைகளை விரட்டத் தண்ணுமை முழக்குவர் (348). தண்ணுமை ஒலி கேட்டு அவை பறந்து விடும். தண் ணுமை முழக்காவிடின் அவை அறுவடையில் உயிரிழக்கும். எனவே உழவர் அருளுணர்ச்சியால் தண்ணுமை முழக்கினர் என்பது இங்கு அறியத்தகும்.

தம்மை மறந்து இருந்த வேந்தரையும், தம் தகுதி அறியாது சிறிதே வழங்கிய மன்னரையும், தமக்குப் பொருள் கொடாது காலம் தாழ்த்திய காவலரையும் புலவர்கள் கடிவது வழக்கம். அங்ங்னம் கடிந்த பின்பு அருளுணர்ச்சி மேலிடத் தம்மை அவமதித்தமையால் அம்மன்னர் கேடுறுவரே என்று அஞ்சி, "நீ நோயின்றி வாழ்வாயாக!' என்று கூறி வாழ்த்துவது வழக்கம் (209) .

வறுமையால் வாடிய புலவனோ, பாணனோ, கூத்தனோ ஒரு வள்ளலைக் கண்டு பாடி அல்லது ஆடிப் பரிசில் பெற்று மீளும் போது வழியில் வறுமையுற்ற புலவனையோ, பாணனையோ, கூத்தனையோ பார்க்கும்போது அவனைத் தன் வள்ளல்பால் ஆற்றுப்படுத்துதல் வழக்கம். தான் மட்டும்