பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வாழ்ந்தால் போதும், பிறன் எக்கேடும் கெடுக என்று எண்ணாது அக்கால முத்தமிழ்வாணர் தம்போன்றவரை ஆற்றுப் படுத்தியது, அவரிடமிருந்த உயர்ந்த பண்பாட்டை விளக்குகிறது. இப் பண்பாட்டின் அடியாகத் தோன்றியவையே புலவர் ஆற்றுப்படை (48), விறலி ஆற்றுப்படை (106) பாணாற்றுப்படை (143) முதலிய நூல்கள்.

கல்வி கேள்வி ஒழுக்கங்களால் சிறந்த சான்றோர் போர்களையே விரும்பிய மன்னர்களுக்கும் வீரர்களுக்கும் வாழ்க்கை நிலையாமையை வற்புறுத்தத் தொடங்கினர்; உடல் நிலையற்றது, செல்வம் நிலையற்றது, வாழ்க்கை நிலையற்றது என்பதைப் பல சான்றுகள் கொண்டு விளக்கி அவர்களை அறவழியில் செலுத்தினர். துறவு உள்ளம் கொள்ளச் செய்தனர். “நாடும் செல்வமும் மன்னர் உயிருக்குத் துணை செய்வதில்லை; அவர் செய்யும் அறிவினையே மறுமைத் துணையாய் நின்று இன்பம் தரும்” (357). இவ்வுலகம் ஒரே நாளில் எழுவரைத் தலைவராகக் கொள்ளும் தன்மை உடையது; அஃதாவது, எந்த ஆட்சியும் நிலையில்லாதது. பற்று விடுதலே இன்பத்தைக் காணும் வழி (358).

“பல நாடுகளை வென்று ஆண்ட முடிவேந்தரும்முடிவில் முதுகாட்டையே அடைந்தனர். நினக்கும் அவ்வாறு ஒரு நாள் வரும் . இவ்வுலகில் இசை அல்லது வசையே நிலைத்து நிற்கும். ஆதலால் வசை நீங்கி இசை வேண்டின், ஒரு பாலும் கோடாது முறை வழங்குதலும் இரவலர்க்கு ஈதலும் நல்லது. இச் செயலால் உலகம் உள்ளளவும் நின் பெயர் நிலை பெற்று விளங்கும்” (359). “சீரிய பண்பு நலன்களைப் பெற்றிருந்த மன்னர் சிலர்; அவர்க்கு மாறுபட்டவரே, மிகப் பலர்; அவரும் மறைந்தனர்; அவர்தம் செல்வமும் மறைந்தது. ஆதலால் ஒழுக்கம் குன்றாமல் அறச் செயல் செய்து நற்பெயர் பெறுதலே நல்லது” (360). அறிவுடை அரசர் தாயினும் சாலப் பரிந்து ஏழைகளுக்கு உதவுவர்;