பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

313


கடவுள் பற்றிய பாடலாதலாலும் அதன் நடை சங்க கால நடையை ஒத்திருத்தலாலும்) முன் வைத்துப் பத்துப் பாட்டு' என நூலுக்குப் பெயரிடப்பட்டது எனக்கோடல் பொருத்தமாகும். முருகனைப் பற்றிச் சங்க காலத்தில் பாடப்பட்ட பரிபாடல்கள் சேர்க்கப்பெறாமல் முருகனைப் பற்றிய இத்திருமுருகாற்றுப்படை மட்டும் 11ஆந் திருமுறையில் இடம் பெற்றிருத்தலே, இது சங்க காலப் பாடல் அன்று என்பதற்கு ஏற்ற மற்றொரு சான்றாகும். பத்துப்பாட்டு என்னும் பெயர்

 இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் உரை கண்டார் என்பது இறையனார் அகப்பொருள் உரையிற் கூறப்பட்டுள்ளது. அவ்வுரையில் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் நெடுமாறன்மீது பாடப்பட்ட பாண்டிக் கோவையின் செய்யுட்கள் காணப்படுகின்றன; நாலடியார், சீவக சிந்தாமணி முதலிய நூல்களின் கருத்தும் சொற்றொடரும் காணப்படுகின்றன. எனவே, அவ்வுரை கி.பி. 11 அல்லது 12ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது என்னலாம்."

அக் களவியலுரையில் கடைச் சங்க நூல்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அப்பட்டியலில் பத்துப்பாட்டு இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அக் காலத் தில் பத்துப் பாக்களும் தொகுக்கப்பட்டிருக்குமாயின் அத் தொகுப்பின் பெயர் அவ்வுரையில் இடம் பெற்றிருக்கு மன்றோ?

இளம்பூரணர்என்பவர் தொல்காப்பிய உரையாசிரியருள் காலத்தால் முற்பட்டவர். அவர் காலம் கி. பி. 11 அல்லது 12ஆம் நூற்றாண்டு என்னலாம்." அவர் பத்துப் பாட்டுள் ஒவ்வொன்றையும் அதனதன் தனிப்பெயர்


9. எஸ். வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், அபக்.29 .

10. கலைக்களஞ்சியம், தொகுதி 2, பக். 141.