பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


முறை அப்பெருமானை வழிபடும் முறை, அவனிடம் சென்று அருள் பெறும் முறை, முருகனுடைய அடியார் இயல்புகள். முருகன் அருள்புரியும் விதம், பழமுதிர் சோலை மலையின் வருணனை ஆகியவை கூறப்பட்டுள்ளன.

2.பொருநராற்றுப்படை: இப்பாட்டு 248 அடிகளை உடையது. சோழன் கரிகாலனிடம் பரிசில் பெற்று மீண்டு வந்த பொருநன் ஒருவன் பரிசில் பெறக் கருதிய பொருநன் ஒருவனை வழியிற் கண்டு, அவனைக் கரிகால் சோழனிடம் ஆற்றுப்படுத்தியதாக இது பாடப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவராவர். பொருநர் ஏர்க்களம் பாடுவோர் என்றும், போர்க்களம் பாடுவோர் என்றும், பரணி பாடுவோர் என்றும் பலவகைப்படுவர். அவருள் இப்பாட்டில் வரும் பொருநன் போர்க்களம் பாடு பவனாவன்.

பொருநர் ஊர் விழாவில் தங்கள் இசைக் கலைத்திறனைக் காட்டுதல், அவ்விழா முடிந்த பின்பு வேற்றுாரை நோக்கிச் செல்லுதல், பாலையாழ் வருணனை, இவர்கள் வாசிக்கும் பாலைப்பண்ணைக் கேட்டு ஆறலை கள்வர் தம் கொடுஞ்செயலை மறந்து அன்புடையராதல், விறலியின் வருணனை, கரிகாற் சோழன் பரிசிலரை விரும்பி உபசரித்தல், உணவு வகை, பொருநர் விறலியர் முதலியோர் பரிசு பேறுதல், கரிகாலன் வீரச்செயல்கள், காவிரியின் சிறப்பு முதலியன இந்நெடும்பாட்டில் இடம் பெற்றுள்ளன.

3.சிறுபாண் ஆற்றுப்படை: 269 அ டி க ைள க் கொண்ட இப்பாட்டு, சீறியாழை வாசித்த பாணனொருவனைப் பரிசில் பெற்ற சிறுபாணன் ஒய்மானாட்டு நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் இடைக்கழி நாட்டு கல்லூர் நத்தத்தனார் என்பவர் இடைக்கழி நாடு என்பது செங்கற்பட்டு மாவட்டத்து மதுராந்தகம் வட்டத்திலுள்ள கடற்கரைப் பகுதியாகும். அப்பகுதி உப்பங்கழிக்கும் கடலுக்கும் இடைப்