பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



318

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

காப்பவர் தன்மை, எயிற்றியர் செயல், கானவர் செயல் , வீரக்குடி மக்கள் இயல்பு, முல்லை நில மக்களின் செயல்கள், உழவர் செயல்கள், பாலை நிலத்தார் இயல்புகள், அந்தணர் ஒழுக்க முறை, நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு, பட்டினத்தின் (மாமல்லபுரம்) சிறப்பு, திருவெஃகாவில் திருமால் கிடந்த கோலம், காஞ்சி நகரின் சிறப்பு, இளந்திரையனுடைய வீரம் கொடை முதலிய பண்புகள், பாணரும் விறலியரும் மன்னனிடம் சிறப்புப் பெறுதல் முதலியன கூறப் பட்டுள்ளன.

5. முல்லைப் பாட்டு: 103 அடிகளை உடைய இப்பாட்டு முல்லை என்னும் ஒழுக்கத்தைப் பற்றியது. மனைவி, தன்னைப் பிரிந்து சென்ற கணவன் கூறியபடி அவன் வரும் வரையில் அவனது பிரிவை ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒழுக்கமே முல்லை என்பது. முல்லை ஒழுக்கம் பற்றிய பாட்டு முல்லைப் பாட்டு’ எனப் பெயர் பெற்றது. இதனைப் பாடியவர் நப்பூதனார் என்பவர். இவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகர்.

பிரிந்து சென்ற தலைவன் வரத்தகும் சகுனத்தைப் பெருமுது பெண்டிர் பார்த்தல், போருக்குச் சென்ற தலைவன் தங்கியுள்ள பாசறையின் அமைப்பு, அங்குப் பாகர் யானைகளிடம் பழகும் தன்மை, அங்குள்ள அரசனது பள்ளியறையின் இயல்பு, அங்கு வீரமங்கையர், நாழிகை சொல்பவர், மெய்க்காப்பாளர் ஆகியோர் செயல்கள், அரசன் பகைவர் தாக்குதலால் துன்புற்ற தன் படைகளைப் பார்வையிடுதல், தலைவி தலைவனைக் காணாமல் துன்புறுதல், கார்காலத்து மீண்டுவரும் தலைவன் வழியில் காணும் காட்சிகள் முதலியன இப்பாட்டில் இடம் பெற்றுள்ளன . 6.மதுரைக்காஞ்சி மதுரைக்காஞ்சி என்பது "மதுரையில் அரசனுக்குக் கூறிய காஞ்சி' எனப் பொருள் படும். யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை முதலிய பல்வேறு நிலையாகையைச் சான்றோர் கூறுதல் காஞ்சித்