பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

327


அதே பாடல், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன், அந்தணர்க்குக் கூறிய முறைப்படி முன்னுள்ள கருமங்களை முடித்துப் பின்னர்த் தத்துவங்களை ஆராய்ந்து மெய்ப்பொருள் உணர்ந்து, வீட்டின்பம் எய்திய ஆசிரியரிடத்தே தானும் அம்முறையே சென்று வீட்டின்பத்தைப் பெற்றான் (வரி 759-762) என்று கூறுகின்றது. பாண்டியன் வேதியர் சொற்படி பல யாகங்களைச் செய்து முடித்தவன் என்பதை இச்செய்தி உணர்த்துகிறது.

அந்திக்கால நிகழ்ச்சிகளைக் குறிக்கும் குறிஞ்சிப்பாட்டு, “அந்தணர் அந்தி நேரத்தில் வேத நெறிப்படி சில தொழில்களை நிகழ்த்தினர்” (வரி, 225) என்று கூறியுள்ளது. "பூம்புகார் வணிகர் யாகங்களைச் செய்தனர், நான்மறை யோர் புகழ் பரப்பினர்' என்று பட்டினப்பாலை (வரி 200-202) குறித்துள்ளது. இச்செய்தியும் பிற சங்க நூல் களில் காணப்படாதது.

இதுகாறும் கூறப்பெற்ற அந்தணர் பற்றிய செய்திகளால், அந்தணர் அரசர்களிடம் தனி ஊர்களைப் பெற்று வாழ்ந்தனர், அரசர்களிடம் பரிசில் பெற்றனர், மன்னராலும் குடிகளாலும் மதிக்கப்பட்டனர், கல்வி கேள்வி ஒழுக்கங்களில் சிறந்திருந்தனர். புலவர்கள் தம் பாக்களில் பாடும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பன அங்கைக் கனியென விளங்குகின்றன அல்லவா?

புராணக் கதைகள் : திருமுருகாற்றுப் படையில் முருகன் இந்திரன் மகளான தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டமை (வரி 6), முருகன் சூரபதுமனைக் கொன்றமை (46, 60), முருகன் தாய்மார் அறுவரால் வளர்க்கப்பட்டமை (255) , சிவபெருமான் முப்புரம் எரித்தமை (154), இந்திரன் நூறு வேள்விகள் செய்தமை (155-156) , திருமாலின் கொப்பூழிலிருந்து தோன்றிய தாமரை மலரில் நான்முகன் உண்டானமை (164-165), ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர்